நியூயார்க்: நியூயார்க்கின் ஆடம்பர விழாவாக கருதப்படும் மெட் காலா 2023 நிகழ்வு தொடங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து உலகளவில் உள்ள பிரபலங்கள் பலரும் வித்தியாசமான ஆடை அணிந்து நிகழ்வில் பங்கேற்று வருகின்றனர்.
ஃபேஷன் துறையில் ஐகானாக இருந்த கார்ல் லாகர்ஃபெல்ட் கடந்த 2019 ஆம் ஆண்டு உயிரிழந்தார். அந்தவகையில் கார்ல் லாகர்ஃபெல்ட்டைப் பெருமைப்படுத்தும் வகையில் இவ்வாண்டு பிரபலங்கள் முத்துகள் பதித்த ஆடைகள், கருப்பு- வெள்ளை ஆடைகளை அணிந்து வந்திருந்தனர்.
மேலும் கார்ல் லாகர்ஃபெல்ட்டின் பூனையான ‘Choupette ’ தோற்றத்தில் ஜார்ட் லெடோ, டோஜா கேட் இருவரும் ஆடை அணிந்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினர்.
நிகழ்வில் கார்ல் லாகர்ஃபெல்ட் பூனையும் கவுரவிக்கப்பட்டது. இந்நிகழ்வில் இந்தியாவை சேர்ந்த அலியா பட், பிரியங்கா சோப்ராவும் கலந்து கொண்டனர்.
மெட் காலவின் வரலாறு… மெட்காலா ஆடை கண்காட்சி 1948 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த நிகழ்வு நியூயார்க் நகரத்தின் மன்ஹாட்டனில் உள்ள அன்னா வின்டோரால் மெட்ரோ பொலிட்டன் கலை அருங்காட்சியகத்தில் உள்ள ஆடை நிறுவனத்திற்கு பயனளிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வு. இந்த காண்காட்சியின் மூலம் கிடைக்கும் நிதி மெட்ரோ பொலிட்டன் அருங்காட்சியகத்துக்கு வழங்கப்படும்.
இந்த நிகழ்வில் சினிமா, அரசியல், சோசியல் மீடியா பிரபலங்கள், விளையாட்டு வீராங்கனைகள், பத்திரிகையாளர்கள் என பலரும் ஆண்டுதோறும் கலந்து கொள்கின்றனர்.
ஆண்டுதோறும் மே மாதம் நடைபெறும் இந்த நிகழ்வில் ஃபேஷன் ஐகானாக இருப்பவர்கள் கவுரவிக்கப்படுகிறார்கள். இந்த நிகழ்வில் பார்வையாளராக கலந்து கொள்ள ஆயிரக்கணக்கான டாலர்கள் செலவிட வேண்டி இருக்கும்.