பெங்களூரு: பஜ்ரங் தள், பாப்புளர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா தடை போன்ற காங்கிரஸ் வாக்குறுதிகள் முஸ்லிம்களை சமாதானப்படுத்தும் முயற்சி என்ற பாஜக தெரிவித்துள்ளது.
தேர்தல் நடைபெற இருக்கும் கர்நாடகா பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்வதற்தகாக அசாம் முதல்வர் ஹேமந்த பிஸ்வா சர்மா கர்நாடகா வந்துள்ளார், அவர் இன்று (செவ்வாய்க்கிழமை) பெங்களூருவில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது: மாநிலத்தில் பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா ஏற்கனவே தடை செய்யப்பட்டுள்ளது. சித்தராமையா அரசு பிஎஃப்ஐ மீதுள்ள வழக்குகளை திரும்பப்பெற்றது. அதனால் முஸ்லிம்களை சமாதானப்படுத்த அவர்கள் பஜ்ரங் தள்-ஐ தடை செய்வோம் என்கிறார்கள்.
நாங்கள் பழிவாங்குவோம் என்று பிஎஃப்ஐ கூறமுடியாது என்று காங்கிரஸ் கட்சி கூறுகிறது. அந்தக் கட்சியின் தேர்தல் அறிக்கை, பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா மற்றும் அடிப்படைவாத முஸ்லிம் அமைப்புகளின் அறிக்கையைப் போல உள்ளது” என்று தெரிவித்தார்.
முன்னதாக கர்நாடகா சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை காங்கிரஸ் கட்சி செவ்வாய்க்கிழமை வெளியிட்டது. அதில்,” சட்டமும் அரசியலமைப்பும் மிகவும் புனிதமானது. தனிமனிதர்களோ, பஜ்ரங் தள், பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா போன்ற அமைப்புகளோ சட்டத்திற்கு விரோதமாக, சிறுபான்மை அல்லது பெரும்பான்மையாக உள்ள சமூகத்தினரிடையே வெறுப்பு, பிளவை ஏற்படுத்துவதை அனுமதிக்க முடியாது. எனவே நாங்கள் சட்டத்திற்கு உட்பட்டு அவற்றை தடை செய்வது உள்ளிட்ட தீவிர நடவடிக்கை எடுப்போம்”என்று தெரிவித்திருந்தது.
இதற்கிடையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில், சட்டத்திற்கு புறம்பான நவடிக்கைகள் தடைச் சட்டத்தின் (உபா) கீழ் பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியாவை சட்டத்திற்கு புறம்பான அமைப்பு என்று கூறி ஐந்து ஆண்டுகளுக்கு மத்திய அரசு தடை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
காங்கிரஸ் தேர்தல் அறிக்கை: கர்நாடக தேர்தல் | மகளிர்க்கு மாதம் ரூ.2000 முதல் பஜ்ரங் தள், பாப்புலர் ஃப்ரன்ட்டுக்கு தடை வரை.. காங்கிரஸ் தேர்தல் அறிக்கை முக்கிய அம்சங்கள்