புதுச்சேரியில், பைக்கில் இருந்து தவறி விழுந்த பெண் மீது கார் மோதியதில் அவர் உயிரிழந்தார்.
கோட்டக்குப்பம் அடுத்த கூனிமேட்டைச் சேர்ந்த ஜீனத் பேகம் மற்றும் மகன் அப்துல் ரசாத் ஆகியோர் கடந்த இரு தினங்களுக்கு முன்பு ஈ.சி.ஆர் சாலையில் சின்னமுதலியார் சாவடி அருகே பைக்கில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது அவர்கள் முன்னால் சென்ற பைக் திடீரென பிரேக் போட்டதால் தனது பைக்கை அப்துல் ரசாத் வேகமாக நிறுத்தினார்.
இதில் நிலைதடுமாறி பைக் விழுந்த நிலையில் மகனும், பின்னால் இருந்த ஜீனத் பேகமும் தவறி கீழே விழுந்தனர்.
அப்போது புதுச்சேரியில் இருந்து சென்னை நோக்கி வேகமாக சென்று கொண்டிருந்த கார் கீழே விழுந்து கிடந்த ஜீனத் பேகம் மற்றும் அவரது மகன் மீது வேகமாக மோதியது.
இதில் மகன் தூக்கி வீசப்பட்ட நிலையில் தாய் சம்பவ இடத்திலேயே பலத்த காயமடைந்தார். இதனை அடுத்து இருவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி ஜீனத்பேகம் உயிரிழந்தார்.