சோபியா: கருங்கடல் அருகே நடந்த அகழாய்வில் ஒரே கல்லறையில் இருந்து கிலோ கணக்கில் தங்கம் கண்டறியப்பட்டுள்ளது. இது தொடர்பான படங்கள் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
பண்டைக் காலத்தில் மன்னர் குடும்பத்தினர் எவ்வளவு சொகுசான வாழ்க்கையை வாழ்ந்தார்கள் என்பதை நாம் கதைகளில் படித்திருப்போம்.. அதேபோல ஆய்வுகளிலும் கூட மன்னர்களின் செல்வச் செழிப்பு குறித்த தகவல்களை நம்மைப் பிரமிக்கவே வைக்கும்..
இதற்கு நாம் பல உதாரணங்களைச் சொல்ல முடியும். இதற்கிடையே Black sea எனப்படும் கருங்கடல் அருகே உள்ள பகுதியில் நடந்த அகழாய்வு படங்கள் இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.
அகழாய்வு பணிகள்: நமது இந்த பூமிக்குள் எவ்வளவு புதையல் இருக்கிறது என்பதை யாராலும் துல்லியமாகச் சொல்ல முடியாது. பண்டைக் கால ஆய்வுகள் குறித்து இப்படி தொடர்ச்சியாகப் பல செய்திகள் வந்து கொண்டு தான் இருக்கிறது. அப்படிதான் சமூக வலைத்தளங்களில் சமீபத்தில் ஒரு படம் டிரெண்டானது. அந்தப் படத்தில் கல்லறையில் எலும்புக்கூடு ஒன்று இருக்கிறது. அந்த எலும்பு கூட முழுக்க தங்க நகைகளால் நிரம்பி இருக்கிறது.
இந்தப் படம் தான் இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. தங்க நகைகளுடன் புதைக்கப்பட்ட இந்த நபர் யார் என்பது குறித்தும் இணையத்தில் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். வெர்னா நெக்ரோபோலிஸ் பகுதியில் கண்டறியப்பட்ட இந்த கல்லறைகள் பேசுபொருள் ஆகியுள்ளது. இங்கே இருக்கும் கல்லறைகளில் தங்கம் கண்டறியப்படுவது இது முதல்முறை இல்லை.
கல்லறைகள்: ஏற்கனவே, இங்கே இருக்கும் பல கல்லறைகளில் தங்கம் கண்டறியப்பட்டுள்ளன. கருங்கடலின் பல்கேரிய கடற்கரையில் உள்ள இந்த கல்லறை ஒரு தங்கச் சுரங்கம் போலவே இருக்கிறது. இங்கே உள்ள கல்லறைகளில் இருந்து இதுவரை 3000க்கும் மேற்பட்ட தங்கக் கலைப்பொருட்கள் மற்றும் நகைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
1972இல் இங்கே தொழிற்சாலை கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அப்போது இங்கே பள்ளம் தோண்டும் போது இங்குத் தங்க ஆபரணங்கள் கண்டறியப்பட்ட நிலையில், இது குறித்து அவர்கள் தொல்லியல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து நடத்தப்பட்ட அகழாய்வின் போது, அவர்கள் பல கல்லறைகளைக் கண்டுபிடித்தனர்.
கிலோ கணக்கில் தங்கம்: இங்கே பல கல்லறைகள் இருக்கும் போதிலும் ஒன்று தனித்துவமானது. அதுதான் கல்லறை எண் 43. இந்த கல்லறை ஒரு மன்னர் அல்லது தலைவரின் கல்லறையாக இருக்கும் என்று கருதப்படுகிறது. அதில் ஏகப்பட்ட தங்கக் கலைப்பொருட்களும் நகைகளும் உள்ளன. இது தவிரப் பல கல்லறைகளில் இருந்தும் தங்க ஆபரணங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவை அரச குடும்ப உறுப்பினர்களின் கல்லறைகளாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
கல்லறை எண் 36இல், தொல்பொருள் ஆய்வாளர்கள் 850 தங்கப் பொருட்களைக் கண்டுபிடித்தனர். கிரீடம், காதணி, நெக்லஸ், பெல்ட், பிரேஸ்லெட் எனப் பல பொருட்கள் இடம் இதில் இருந்தது. இதைப் பார்த்து ஆய்வாளர்களே ஒரு நிமிடம் ஸட்ன் ஆகினர்.
எந்த காலம்: இதையடுத்து ரேடியோகார்பன் டேட்டிங் மூலம் இந்த கல்லறைகள் காலத்தை ஆய்வாளர்கள் ஆய்வு செய்தனர். இது செப்புக் காலத்தைச் சேர்ந்தவை என்றும், இது கிமு 4560-4450 காலத்தைச் சேர்ந்தது என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
கல்லறை எண் 43ல் இருந்து இதுவரை மொத்தம் 6.5 கிலோவுக்கும் அதிகமான தங்கம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த கல்லறை 5 அடி 8 அங்குலம் உயரம் கொண்ட 40 முதல் 45 வயதுக்குட்பட்ட ஆண் ஒருவரின் கல்லறையாக இருக்கும் கூறப்படுகிறது. இதுதான் உலகின் மிகவும் பழமையான தங்கமாகக் கருதப்படுகிறது.
மன்னர்: அங்கே கிடைத்துள்ள தங்கத்தின் அளவை வைத்துப் பார்க்கும்போது, இது ஒரு மன்னனின் கல்லறையாக இருக்கலாம் என்றே கூறப்படுகிறது. ஏனென்றால் அந்த காலத்தில் இத்தனை தங்கம் இருந்தது என்றால் நிச்சயம் அவர் அரசனாக மட்டுமே இருக்க முடியும் என்றே ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.