தூக்கு தண்டனைக்கு மாற்றாக மரண தண்டனை.. என்ன அது? மத்திய அரசு தகவல்..!

இந்திய தண்டனை சட்டத்தின் உச்சமாக மரண தண்டனை விதிக்கப்பட்டு வருகிறது. ”1973 ஆம் ஆண்டின் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 354(5) இன் கீழ் “இறக்கும் வரை கழுத்தில் தொங்குதல்” என்பது அதி தீவிர தண்டனையாகும்.

இந்தியாவில் கடைசியாக டெல்லி நிர்பயா கூட்டு பலாத்காரம் மற்றும் கொலை வழக்கில் 4 குற்றவாளிகளுக்கு 2020 ஆம் ஆண்டு திகார் சிறையில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில் சட்டப்படி குற்றவாளியை கொல்ல நடைமுறையில் உள்ள தூக்கு தண்டனைக்கு பதிலாக மாற்று தண்டனையை குறித்து ஆராய மத்திய அரசு முயற்சி எடுக்கவுள்ளது.

டெல்லி உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ரிஷி மல்ஹோத்ரா என்பவர் வழக்கு தொடுத்தார். அந்த மனுவில், சட்ட ஆணையத்தின் 187வது அறிக்கையில் தூக்கு தண்டனையை ரத்து செய்து, அதற்கு பதிலாக மின்சாரம், துப்பாக்கிச் சூடு அல்லது மரண ஊசி மூலம் மரண தண்டனை விதிக்கும் நாடுகளின் எண்ணிக்கை கணிசமான உயர்ந்துள்ளது. ஒரு குற்றவாளியை தூக்கிலிடும்போது அவன் கடுமையான சித்திரவதையையும், வலியையும் அனுபவிப்பதாக அந்த அறிக்கை கூறுகிறது. எனவே, தூக்கு தண்டனையை ஒழித்து, அதற்கு பதிலாக மரண ஊசி அல்லது மின்சாரம் தாக்குதல் போன்ற மாற்று முறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் மற்றும் நீதிபதி ஜே.பி.பார்திவாலா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் கருத்து கேட்டதற்கு ” தூக்கு பொருத்தமான தண்டனையா? அது வலியற்ற முறையா என்பதை ஆராய நிபுணர் குழுவை அமைக்க உள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஏற்கனவே இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தூக்கு தண்டனையின் போது ஏற்படும் பாதிப்பு மற்றும் வலி குறித்து ஏதேனும் தரவு அல்லது ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளதா? அது மிகவும் பொருத்தமான முறையா என்பது குறித்த விவரங்களை அளிக்குமாறு மத்திய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில், இந்த விசாரணையின்போது பதில் அளித்த அரசு, ஆய்வு செய்யும் நிபுணர்களின் பட்டியலை தயார் செய்து வருவதாக தெரிவித்தது. அப்போது நீதிபதிகள், மத்திய அரசு இந்த ஆய்வை மேற்கொள்ளவில்லை என்றால், தேசிய சட்டப் பல்கலைக் கழகங்களான என்.எல்.யு. அல்லது ஹைதராபாத், எய்ம்ஸ் மருத்துவர்கள், நாடு முழுவதும் உள்ள புகழ்பெற்றவர்கள் மற்றும் சில அறிவியல் நிபுணர்களைக் கொண்ட குழுவை அமைக்கலாம் என கருத்து தெரிவித்து வழக்கை ஒத்திவைத்தனர். மீண்டும் இந்த வழக்கு ஜூலை இரண்டாவது வாரத்தில் விசாரணைக்கு வரவுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.