சியோல்: கலை அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்ட பல லட்சம் மதிப்பிலான கலைப்படைப்பில் இருந்த வாழைப்பழத்தை இளைஞர் ஒருவர் சாப்பிட்ட வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.
கலை உலகில் என்ன நடக்கிறது என்பது நம்மில் பெரும்பாலானோருக்குப் புரியாது. பார்க்க எளிமையாக இருக்கும் எதாவது ஒன்றின் விலையைக் கேட்டால் பல லட்சம் சொல்வார்கள். இது நமக்குத் தலையே சுற்றும்.
அதேபோல கலைப்பொருட்கள் இருக்கும் சில அருங்காட்சியகங்களுக்குச் சென்றாலும் நமக்குக் குழம்பிவிடும். சில பொருட்களைப் பார்த்தால் இதையெல்லாம் ஏன் இங்கு வைத்துள்ளார்கள் என நினைப்போம். ஆனால், அது பல கோடி மதிப்புடையதாக இருக்கும்.
வாழைப்பழம்: இப்படிப் பல வினோத சம்பவங்கள் நடக்கவே செய்யும். அப்படியொரு சம்பவத்தின் வீடியோ தான் இணையத்தில் வேகமாக டிரெண்டாகி வருகிறது. தென் கொரியத் தலைநகர் சியோலில் இருக்கும் லீயம் கலை மியூசியத்திற்கு அங்குள்ள மாணவர் ஒருவர் சென்றுள்ளார். அங்கே மியூசியத்தில் டேப்பில் வாழைப்பழம் ஒட்டப்பட்டிருந்த நிலையில், அதை எடுத்து அவர் சாப்பிட்டுவிட்டார்.
காலை உணவைத் தான் மிஸ் செய்துவிட்டதாகவும் இதனால் அங்கு வந்ததும் தனக்குப் பசித்தாக தெரிவித்த அவர், இதன் காரணமாகவே சுவரில் ஒட்டப்பட்ட வாழைப்பழத்தைச் சாப்பிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
இதை ஏதோ சும்மா சுவரில் வைத்துள்ள வாழைப்பழம் என நினைத்து விடாதீர்கள். இது மிக முக்கிய கலைப்படைப்பாம். ‘காமெடியன்’ எனப்படும் நிறுவப்பட்ட கலைப்படைப்பின் ஒரு பகுதியாக இருந்தது. இதை கேட்டலன் என்பவர் உருவாக்கியிருந்தார். கலை உலகில் இதை முக்கியமான ஒன்றாகவே பார்க்கிறார்கள்.
ரூ: 98 லட்சம்: டேப்பில் வாழைப்பழத்தை ஒட்டியுள்ளனர். இது என்ன அதிகபட்சம் சில நூறு ரூபாய் இருக்கும் என்று நினைத்துவிடாதீர்கள். இது கடந்த டிசம்பர் 2019இல் ஆர்ட் பாசல் மியாமி பீச் என்ற அமைப்பிற்கு $120,000, அதாவது இந்திய மதிப்பில் 98 லட்ச ரூபாய்க்கு விற்கப்பட்டது. இதுபோன்ற மற்ற இரு படைப்புகளும் அதிக விலைக்கு விற்கப்பட்டன.
இந்த 98 லட்ச ரூபாய் மதிப்பிலான கலைப்படைப்பில் இருந்து தான் பசிக்கிறது என்று அந்த மாணவர் வாழைப்பழத்தை எடுத்துச் சாப்பிட்டு இருக்கிறார். இது சம்பவம் குறித்து இதை உருவாக்கிய கேட்டலனிடம் சொல்லப்பட்டதாம். இருப்பினும் அவர் இதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்று அந்த மியூசியம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த மாணவர் டேப்பில் வாழைப்பழ தோலை ஓட்டிய நிலையில், அது அகற்றப்பட்டு அதற்குப் பதிலாக புதிய வாழைப்பழம் வைக்கப்பட்டது. அந்த மாணவரின் வீடியோ இணையத்தில் டிரெண்டான போதிலும், அவர் மீது எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஏனென்றால் பொதுவாகவே இந்த கலைப்படைப்பில் உள்ள வாழைப்பழம் 2,3 நாட்களுக்கு ஒரு முறை மாற்றப்படுமாம். இதனால் அந்த மாணவர் மீது புகாரும் தரப்படவில்லை.
முதல்முறை இல்லை: மேலும், இந்த கலைப்படைப்பில் இருக்கும் பழத்தை ஒருவர் எடுத்துச் சாப்பிடுவது இது முதல்முறை இல்லை. ஏற்கனவே, கடந்த 2019இல் மியாமியில் உள்ள ஆர்ட் பாசலில் உள்ள பெரோட்டின் கேலரியில் இந்த கலைப்படைப்பு காட்சிக்கு வைக்கப்பட்ட போது, ஒருவர் வாழைப்பழத்தை எடுத்துச் சாப்பிட்டார். இது அப்போதே பெரும் பரபரப்பைக் கிளப்பியது குறிப்பிடத்தக்கது.