கர்நாடகாவில் மே 10 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடக்கவுள்ளதால் அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், கர்நாடக மாநில
காங்கிரஸ்
கமிட்டி தலைவர் டி.கே.சிவகுமார் கோலார் பகுதியில் நடக்கவிருந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள ஜக்கூர் விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டார்.
ஹெலிகாப்டர் உயரே பறந்து கொண்டிருந்தபோது கழுகு மோதி முகப்பு பகுதி கண்ணாடி உடைந்து சேதம் அடைந்துள்ளது. உடனே ஹெலிகாப்டர் ஹெச்ஏஎல் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. அதிர்ஷ்டவசமாக இதில் பயணித்த அனைவரும் உயிர் தப்பினர். இந்த சம்பவத்தில் சிவகுமாருடன் பயணித்த மற்றொருவருக்கு லேசான காயம் ஏற்பட்டதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ட்விட்டரில் தகவல் வெளியிட்ட காங்கிரஸ், ஹெலிகாப்டரில் இருந்த அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர். கார் மூலம் சிவக்குமார் கோலார் சென்றடைந்தார் என தெரிவித்துள்ளது.
கர்நாடகாவில் மே 10 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற இருப்பதை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி பிரச்சாரம் மற்றும் பேரணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளது. ராகுல், பிரியங்கா காந்தி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நடந்து வரும் பொதுக்கூட்டம் மற்றும் பேரணிகளில் பங்கேற்று வாக்கு சேகரித்து வருகின்றனர்.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்டது, அதில் ஒவ்வொரு வீட்டிற்கும் 200 யூனிட் இலவச மின்சாரம், அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் மாதம் 2,000 ரூபாய் உரிமைத் தொகை, வேலையில்லாத பட்டதாரிகளுக்கு 2 ஆண்டுகளுக்கு 3,000 நிதியுதவி, வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்களில் உள்ள உறுப்பினர்களுக்கு தலா 10 கிலோ அரிசி இலவசம், டிப்ளமோ முடித்து வேலை தேடும் இளைஞர்களுக்கு இரண்டு வருடத்திற்கு மாதம் 1500 ரூபாய் நிதியுதவி, கர்நாடக மாநில முழுவதும் மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து வசதி ஆகிய முக்கிய வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன.