இந்திய அரசியலில் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சரத் பவார் இன்று தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவியிலிருந்து விலகப்போவதாக அறிவித்திருக்கிறார். அவரது முடிவு கட்சித் தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. மகாராஷ்டிராவில் எப்போதும் இல்லாத வகையில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளை ஒரே அணியில் சேர்த்து `மகாவிகாஸ் அகாடி’ என்ற கூட்டணியை உருவாக்கினார். இந்தக் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் சரத் பவாரின் முடிவால் ஆச்சர்யமும் அதிர்ச்சியும் அடைந்திருக்கின்றனர்.
இது குறித்து சிவசேனா(உத்தவ்) எம்.பி.சஞ்சய் ராவுத், “இந்திய அரசியல் மற்றும் சமூக பிரச்னைகளின் மூச்சாக சரத் பவார் இருக்கிறார். மோசமான குற்றச்சாட்டு காரணமாக பால் தாக்கரேயும் ஒரு முறை தனது சிவசேனா தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். சிவசேனா தொண்டர்களின் அன்பால் அந்த ராஜினாமா முடிவை திரும்பப் பெற்றுக்கொண்டார். அதே வரலாறு திரும்பியிருக்கிறது. பால் தாக்கரேயைப்போல் சரத் பவாரும் மகாராஷ்டிரா அரசியலின் ஆன்மாவாக இருக்கிறார்” என்று தெரிவித்தார்.
மற்றொரு கூட்டணிக் கட்சித் தலைவரும் மகாராஷ்டிரா காங்கிரஸ் தலைவருமான நானா பட்டோலே இது குறித்துப் பேசுகையில், “இறுதி மூச்சு இருக்கும்வரை சரத் பவார் பொது வாழ்க்கையில் இருப்பார் என்று நாங்கள் நினைத்தோம். ஆனால் ஏன் ராஜினாமா செய்தார் என்பதை எங்களிடம் சொல்லவில்லை. இதனால் மகாவிகாஸ் அகாடியில் எந்த பாதிப்பும் ஏற்படாது. புதிய தலைவர் மகாவிகாஸ் அகாடியில் இருப்பார் என்று நம்புகிறோம்” என்று தெரிவித்தார்.
முன்னாள் முதல்வர் அசோக் சவான், “இது அவரது கட்சியின் உட்கட்சிப் பிரச்னை. ஆனால் சரத் பவார் போன்ற அனுபவமுள்ள் தலைவர் திடீரென ராஜினாமா செய்வதாக அறிவித்திருப்பது நிச்சயம் அதிர்ச்சியளிக்கும் வகையில் இருக்கிறது. அதுவும் பா.ஜ.க-வுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஓரணியில் இணையும் நேரத்தில் சரத்பவார் ராஜினாமா செய்யப்போவதாக அறிவித்திருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது” என்று தெரிவித்திருக்கிறார்.