தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவராக இரண்டாவது முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் `ஶ்ரீதேனாண்டாள்’ முரளி ராமசாமி. 615 வாக்குகள் பெற்றுத் தேர்வாகியிருக்கிறார். துணைத்தலைவர்களாக ‘லைகா’ தமிழ்க்குமரன், (651 வாக்குகள்), அர்ச்சனா கல்பாத்தி (588 வாக்குகள்) பெற்று வெற்றி பெற்றனர். செயலாளர்களாக எஸ். கதிரேசன் (617 வாக்குகள்), ராதாகிருஷ்ணன் (502 வாக்குகள்) இருவரும் வெற்றிபெற்றனர். புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்துகள் தெரிவித்துவிட்டு, தலைவர் முரளி ராமசாமியிடம் பேசினேன்.
“இரண்டாவது முறையா தயாரிப்பாளர்கள் என்னைத் தேர்ந்தெடுத்தது ஒரு பக்கம் சந்தோஷமா இருந்தாலும், பொறுப்புகள் கூடியிருக்கு என்பதையும் உணர்றேன். முதன்முறை நான் சங்கத் தலைவர் ஆகுறதுக்கு முன்னாடி பல வருஷங்களா பொதுக்குழுவே கூட்டப்படாமல் இருந்தது. சங்கத்தையும் முறைப்படி பதிவு பண்ணாமல் வச்சிருந்தாங்க. அதையெல்லாம் நான் பொறுப்பேற்ற பின், அரசின் உதவியோடு, நல்ல படியாக பொதுக்குழுவை நடத்தியதோடு, சங்கத்தையும் முறைப்படி பதிவு பண்ணியிருக்கேன்.
எல்லாவற்றையும் இழந்த மூத்த தயாரிப்பாளர்கள் நலனிலும் கவனம் செலுத்தினோம். அவங்களுக்கு மாத உதவித்தொகையும் ஏற்படுத்திக்கொடுத்தோம். முதல்முறை நான் பதவியேற்ற போது எட்டு மாத காலமாக கொரோனாக் காலகட்டம் இருந்தது. சினிமாத் துறையே முடங்கியிருந்த சமயத்திலும், எல்லோருக்கும் உதவினோம்.
இன்ஷூரன்ஸும் இரண்டு டேர்ம் பண்ணியிருக்கோம். ஒவ்வொரு டேர்மிலும் இரண்டு கோடி ரூபாய் செலவு பண்ணி இன்ஷூர் பண்ணியிருக்கோம். நிதி இல்லாத சூழல் இருந்த நிலையை மாற்றி, இப்போ ஒரு கோடி ரூபாய் நிதி இருக்கிற ஆரோக்கியமான சூழலை உருவாக்கியிருக்கோம். ஆனாலும் இரண்டாவது முறையாக நான் போட்டியிட்ட போது, நான் எதுவுமே செய்யலைன்னு பொய்ப்பிரசாரம் பண்ணினாங்க. தயாரிப்பாளர்களுக்கு உண்மை நிலை தெரிந்ததால், என்னை மறுபடியும் ஆதரிச்சிருக்காங்க.
சங்கத்துல இதுவரைக்கும் எங்க அப்பா (இராமநாராயணன்) மட்டும்தான், இரண்டு முறை ஜெயிச்சிருக்காங்க. அந்தப் பெருமை எனக்கும் கிடைச்சது சந்தோஷமா இருக்கு. தேர்தலுக்கு முன்பாக தமிழக அரசும் 2015 – 2022 ஆண்டுவரை குறைந்த செலவில் தயாரித்து வெளியிடப்பட்ட தரமான தமிழ்த் திரைப்படங்களுக்கு மானியம் வழங்குவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருவது பத்தி அறிவிச்சது எங்களுக்கு இன்னும் பலமாகிடுச்சு. ஒவ்வொரு திரைப்படத்திற்கும் இத்திட்டத்தின் வாயிலாக ரூ.7 லட்சம் மானியமாக வழங்குறாங்க. இதனால எங்கள் நலம் காக்கும் தயாரிப்பாளர்கள் அணிமீது தயாரிப்பாளர்களுக்கு ஒரு நம்பிக்கை வந்திடுச்சு. பொறுப்புகள் அதிகரிச்சிடுச்சு. அரசின் உதவியோடு சிறுபட்ஜெட் தயாரிப்பாளர்களின் நலனில் தொடர்ந்து அக்கறை செலுத்துவோம். அதுக்கான முயற்சியில் தொடர்ந்து பாடுபடுவேன்” என்கிறார் முரளி ராமசாமி.