`மே மாதத்தில் திடீர் மழை பெய்தது ஏன்?' – வானிலை ஆய்வு மைய இயக்குநர் விளக்கம்!

“என்னாம்மா வெயில் அடிக்குது” என்று தவித்துக் கொண்டிருந்த மக்களுக்கு, கடந்த சில தினங்களாக பெய்து வரும் மழை குளிர்ச்சியை கொண்டு வந்திருக்கிறது.

இதுகுறித்து பேசியுள்ள சென்னை, வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன், “தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை பெய்யக்கூடும். மே 6-ம் தேதி தென் கிழக்கு வங்கக் கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகும். இதை தொடர்ந்து மே 7, 8-ம் தேதிகளில் தென் கிழக்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும்” என்று தெரிவித்துள்ளார்.

வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன்

மேலும் “மே 2, 3-ம் தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலின் பெரும்பாலான இடங்களில் இடி, மின்னல், பலத்த காற்றுடன் லேசான மழை முதல் மிதமான மழை வரை பெய்ய வாய்ப்பிருக்கிறது. கோவை, நீலகிரி, ஈரோடு ஆகிய மாவட்டங்களின் சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பிருக்கிறது. சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு மேகமூட்டத்துடன் இருக்கும். இதை தொடர்ந்து ஒரு சில இடங்களில் லேசான மற்றும் மிதமான மழை பெய்யும்” என்றும் தெரிவித்துள்ளார்.

‘மே மாதத்தில் இந்த திடீர் மழை ஏன்?’ என்று வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரனிடம் கேட்டோம்…

மழை

“அக்டோபர், நவம்பர், டிசம்பரில் தான் மழை பொழியும் என்பதில்லை. மே மாதத்திலும் மழை பெய்வதற்கான சூழ்நிலை ஏற்பட்டால் கோடைக்காலங்களிலும் மழை பெய்யும்.

இப்போது வளிமண்டலத்தின் கீழடுக்கில் மேற்கு திசை காற்றும், கிழக்கு திசை காற்றும் சந்திக்கிறது. மேலும் வெப்ப மண்டல காற்றலைகள் மேற்கிலிருந்து கிழக்கும், கிழக்கிலிருந்து மேற்கும் நகர்ந்து செல்லும்நிலை உருவாகி இருக்கிறது. இப்படி மழைக்கேற்ற காலநிலை அமைந்துள்ளதால் இப்போது மழை பெய்கிறது. இன்னும் தெளிவாக கூறவேண்டுமானால் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி என்றால் காற்று சுற்றிக் கொண்டிருக்கும் ம் ஒரு பகுதி ஆகும். இது குறைவான காற்றழுத்தத்தை ஏற்படுத்தும். இதன் காரணமாகத்தான் மழை பொழிகிறது” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.