காதல் ஜோடிகள் கதவைப் பூட்டிக்கொண்டு கோவிலுக்குள் திருமணம் செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் மசூலிப்பட்டினம் அருகே புத்தாளபாளையம் கிராம நிர்வாக செயலகத்தில் பணியாற்றி வரும் நாகராஜு, காயத்ரி ஆகிய இருவரும் காதலித்து வந்துள்ளனர்.
பெண்ணின் தந்தை உதவி காவல் ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இரண்டு பேரும் வெவ்வேறு சாதியை சேர்ந்தவர்கள் என்பதால் இருவீட்டாரும் காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அதிலும் பெண் வீட்டார் தரப்பில் மிகவும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் காதல் ஜோடி திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்தனர். இதனையடுத்து அங்குள்ள கோதண்டராமர் கோவிலில் திருமணம் செய்துகொள்ள வந்தனர்.
இருவீட்டார் தரப்பில் இருந்தும் ஆபத்து ஏற்படும் என்று கருதி, கோவிலுக்குள் புகுந்து கேட்டை பூட்டிவிட்டு, திருமணம் செய்துகொண்டனர். இந்த சம்பவம் குறித்து கிராம மக்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், காதல் ஜோடிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி இரண்டு பேரையும் வெளியில் வரவழைத்துக் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
இரண்டு பேரின் பெற்றோர்களையும் காவல் நிலையத்திற்கு வரவழைத்து, இரண்டு பேரும் 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் என்பதால் அவர்களைத் தொந்தரவு செய்யக்கூடாது என்று அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.
newstm.in