புதுடெல்லி: டெல்லி ரோஹிணி நீதிமன்ற துப்பாக்கிச் சூட்டில் தொடர்புடைய பிரபல கேங்ஸ்டர் டில்லி தஜுபுரியா திஹார் சிறையில் அடித்துக் கொலை செய்யப்பட்டார். எதிர் கோஷ்டியினரால் அவர் அடித்துக் கொலை செய்யப்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரத்தக்காயங்களுடன் தஜுபுரியாவை மீட்ட சிறைக்காவலர்கள் அவரை தீன் தயாள் உபாத்யாய் மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
யார் இந்த டில்லு தஜுபுரியா? டெல்லியைச் சேர்ந்த பிரபல கேங்ஸ்டர் தான் இந்த டில்லு தஜுபிரியா. ஆள் கடத்தல், கொலை, கார் கடத்தல், மிரட்டிப் பணம் பறித்தல் போன்ற பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடையவர் டில்லு தஜுபிரியா. இவரைப் போலவே இன்னொரு கிரிமினல் கும்பலுக்கு தலைமையாக இருந்தவர் ஜிதேந்தர் கோகோய். இந்த இரண்டு கும்பலும் டெல்லி போலீஸுக்கு மிகப்பெரிய சவால். கடந்த 10 ஆண்டுகளாகவே இந்த இரு தரப்பும் பல்வேறு கிரிமினல் குற்றங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு இடையேயான கும்பல் மோதலில் இருதரப்பிலும் பல் உயிர்கள் பறிபோயுள்ளன.
இந்நிலையில், கடந்த 2021ஆம் ஆண்டு செப்டமர் 24 ஆம் தேதி டெல்லி ரோஹிணி நீதிமன்ற வளாகத்தில் ஜிதேந்தர் கோகோய் சுட்டுக் கொல்லப்பட்டார். வழக்கறிஞர் உடையணிந்து வந்த டில்லுவின் கும்பலில் இருந்த இருவர் இந்த படுகொலையை அரங்கேற்றினர். கோகோய் சம்பவ இடத்திலேயே உயிரிழக்க துப்பாக்கிச் சூடு நடத்திய டில்லு கும்பலைச் சேர்ந்த இருவரை டெல்லி போலீஸார் நீதிமன்றத்துக்குள்ளேயே சுட்டு வீழ்த்தினர். நாடு முழுவதும் இச்சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்த சம்பவத்திற்குப் பின்னர் டில்லு கும்பலுக்கும் கோகோய் கும்பலுக்கும் இடையேயான வன்ம மோதல்கள் மேலும் வலுத்தது. இந்நிலையில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த டில்லு தஜுபிரியா இன்று மற்றொரு கும்பலைச் சேர்ந்தவர்களால் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார்.