உத்தரப்பிரதேச மாநிலம், அயோத்தியைச் சேர்ந்த ராம் சரண் தாஸ் (80) என்ற முதியவர், இந்த ஆண்டு ஜனவரி முதல் காணவில்லை. அவரைக் காவல்துறை தீவிரமாகத் தேடிவந்தது. இந்த நிலையில், இந்த வழக்கு தொடர்பாக அயோத்தியில் நரசிம்மர் கோயில் பூசாரியான ராம் சங்கர் தாஸ் (28) மீது காவல்துறை அதிகாரிகளுக்குச் சந்தேகம் இருந்ததாகக் கூறப்படுகிறது. அதனால் அவர்மீது வழக்கு பதிவுசெய்திருக்கின்றனர்.
இந்த நிலையில், கடந்த இரண்டு நாள்களாகப் பூசாரி கோயிலுக்கு வராத நிலையில், நேற்று ஃபேஸ்புக் நேரலையில் ராம் சங்கர் தாஸ், “காவலர்கள் என்னைத் துன்புறுத்துகிறார்கள்… குறிப்பாக ராய்கஞ்ச் காவல்துறை அவுட்போஸ்ட்டின் பொறுப்பாளர், கான்ஸ்டபிள் ஆகியோர். அதனால், நான் என்னுடைய வாழ்வை முடித்துக்கொள்ளப் போகிறேன்” எனக் கூறிவிட்டு, தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
அதைத் தொடர்ந்து, அக்கம் பக்கத்தினர் காவல் நிலையத்துக்குத் தகவலளித்திருக்கின்றனர். உடனே சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறை அதிகாரிகள், அவரது அறையின் கதவைத் திறந்து பார்த்தபோது, அவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.
இந்தச் சம்பவம் குறித்து கோட்வாலி காவல் நிலைய அதிகாரி மனோஜ் சர்மா, “ராம் சங்கர் தாஸ் தற்கொலை செய்துகொண்டாரா என விசாரித்துவருகிறோம். இறந்த பூசாரி முன்வைத்த குற்றச்சாட்டுகளை மறுக்கிறோம். அவர் போதைக்கு அடிமையாகிவிட்டதால் தனது வாழ்க்கையை முடித்துக்கொண்டதாகத் தெரிகிறது. விசாரணைக்குப் பிறகு மேலதிக தகவல்கள் தெரியவரும்” எனக் கூறினார்.