காந்திநகர்,
காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தின் போது பிரதமர் நரேந்திரமோடி, நீரவ் மோடி, லலித் மோடியை குறிப்பிட்டு ‘அனைத்து திருடர்களின் பெயரும் மோடி என்று முடிகிறது ஏன்? என்று கேள்வி எழுப்பினார். கர்நாடக மாநிலம் கோலாரில் நடைபெற்ற காங்கிரஸ் பிரசார கூட்டத்தில் ராகுல்காந்தி அவ்வாறு பேசினார்.
இந்த பேச்சை தொடர்ந்து மோடி சமூகம் குறித்து அவதூறு ஏற்படுத்தும் என்ற வகையில் பேசியதாக கூறி ராகுல்காந்தி மீது பாஜகவை சேர்ந்த எம்.எல்.ஏவும், முன்னாள் மந்திரியுமான பூர்னேஷ் மோடி, குஜராத் சூரத் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
கடந்த 4 ஆண்டுகளாக நடைபெற்ற இந்த வழக்கில் கடந்த மார்ச் மாதம் 24-ம் தேதி ராகுல் காந்தியை குற்றவாளியாக அறிவித்து அவருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி கோர்ட்டு தீர்ப்பளித்தது. அதேவேளை, இந்த வழக்கில் ராகுல்காந்திக்கு ஜாமின் வழங்கப்பட்டது.
குற்றவாளி என அறிவிக்கப்பட்டதால் ராகுல்காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டது. அவர் டெல்லியில் தான் வசித்த அரசு பங்களாவில் இருந்தும் காலி செய்தார்.
அதேவேளை, அவதூறு வழக்கில் குற்றவாளி என வழக்கப்பட்ட தீர்ப்பை ரத்து செய்யும்படி ராகுல்காந்தி சூரத் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். அந்த மேல்முறையீடு தள்ளுபடி செய்யப்பட்டது. இதை எதிர்த்து ராகுல்காந்தி குஜராத் ஐகோர்ட்டு மேல்முறையீடு செய்தார்.
ராகுல்காந்தி ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மேல்முறையீட்டில் தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைக்குமாறு வழக்கு தொடர்ந்தார்.
ராகுல்காந்தியின் மேல்முறையீட்டு மனு குஜராத் ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ராகுல்காந்திக்கு வழக்கப்பட்ட தண்டனையை நிறுத்திவைக்க ஐகோர்ட்டு மறுத்துவிட்டது. மேலும், இந்த வழக்கில் எந்த வித இடைக்கால உத்தரவு பிறப்பிக்கவும் ஐகோர்ட்டு மறுத்துவிட்டது.
இந்த வழக்கில் இறுதி உத்தரவு கோடை விடுமுறைக்கு பின்னரே அறிவிக்கப்படும் என்று நீதிபதி பிரஷஷக் தெரிவித்தார். மேலும், இடைக்கால உத்தரவு எதுவும் பிறப்பிக்கவும் அவர் மறுத்துவிட்டார். வரும் 8ம் தேதி முதல் ஜூன் மாதம் 3-ம் தேதிவரை நீதிமன்றத்திற்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறைக்கு பின்னரே வழக்கில் தீர்ப்பு அளிக்கப்படும் என்று கோர்ட்டு தெரிவித்துள்ளதால் ராகுல்காந்திக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
அவதூறு வழக்கில் ராகுல்காந்திக்கு விதிக்கப்பட்ட தீர்ப்பு நிறுத்திவைக்கப்படாததால் அவர் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.