இந்தியாவில் ஐபிஎல் போட்டிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று (திங்கட்கிழமை) லக்னோ சூப்பர் ஜெயன்ட் அணிக்கும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருக்கும் இடையே நடந்த போட்டியில் ஆர்சிபி அணி வெற்றி பெற்றது. முன்னதாக, 127 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய லக்னோ சூப்பர் ஜெயன்ட் அணி 108 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
அப்போது பவுண்டரிக்குள் விராட் கோலி மற்றும் கவுதம் கம்பீருக்கும் இடையே நடந்த மோதல்தான் கிரிக்கெட் அரங்கில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இந்த மோதலின் பின்னணியை ஆராய்ந்தபோது, லக்னோ அணியின் வீரர் மையர்ஸ் விராட் கோலியை அணுகி எதையோ பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த கவுதம் கம்பீர் மையர்ஸை இழுத்து சென்றார். இதனால் குழம்பிய விராட் கோலி அதுகுறித்து கம்பீருடன் கேட்டபோது கவுதம் கம்பீர் ஆக்ரோஷமாக நடந்துகொண்டார். அப்போது இரு தரப்பு வீரர்களும் சமாதானம் செய்து வைத்தனர்.
இந்த வீடியோ காட்சி இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. பலரும் கவுதம் கம்பீரின் நடவடிக்கையை விமர்சித்து வருகின்றனர். இந்த நிலையில் இச்சம்பவத்துக்கு அரசியல் சாயம் பூசி வருகின்றனர். ” பாஜக எம்பி கவுதம் கம்பீர் கன்னடர்களின் பெருமைக்குரிய விராத் கோலியை அவமதிக்கும் காட்சி” என்று ட்விட்டரில் சாந்தனு என்பவர் போட்டுள்ள ட்வீட்டை திமுக திமுக செய்தித் தொடர்பாளர் சல்மா பகிர்ந்துள்ளார்.
சாந்தனு பதிவிட்டுள்ள ட்வீட்டில் ” கன்னடர்களின் பெருமைக்குரிய ஆர்சிபியின் விராட் கோலியை மிரட்டும் பாஜக எம்பிக்கு மே 13ஆம் தேதி பாடம் புகட்ட கர்நாடக மக்கள் தயாராக உள்ளனர்” என குறிப்பிட்டுள்ளார். அந்த ட்வீட்டை பகிர்ந்துள்ள சல்மா ”பாஜக எம்பி கன்னடரான விராத் கோலியை அவமதிக்கும் காட்சி” என்று குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், சாந்தனு பகிர்ந்த ட்வீட்டில் விராட் கோலியை கன்னடர்களின் பெருமைக்குரியவர் என்றுதான் குறிப்பிட்டுள்ளார். அதை திமுக சல்மா, கன்னடர் விராட் கோலி” என்று தவறாக குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு பாஜக ஆதரவாளர் நடிகை கஸ்தூரி எதிர்வினை ஆற்றியுள்ளார். கஸ்தூரி ட்வீட்டில், ” கன்னடர் விராட் கோலியை பாஜக எம்பி கவுதம் கம்பீர் அவமதித்ததாக திமுக செய்தித் தொடர்பாளர் சல்மா குற்றம் சாட்டியுள்ளார். ஏனெனில், இது பகுத்தறிவு சிந்தனை இயக்கம். இந்த ஜோக்கர்களின் போலி செய்திகளுக்கு தமிழ்நாடு பயன்படுகிறது. கர்நாடக வாக்காளர்கள் புத்திசாலித்தனமாக தேர்வு செய்யவும்” என்று கூறியுள்ளார்.
கர்நாடகாவில் சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ளதால் தேசிய கட்சிகளான பாஜகவுக்கும், காங்கிரசுக்கும் நேரடி போட்டி நிலவி வருகிறது. இந்த சமயத்தில் விராட் கோலிக்கும், கவுதம் கம்பீருக்கும் நடந்த மோதலை அரசியல் ரீதியாக தொடர்புபடுத்தி இவ்வாறு கருத்துக்கள் வைக்கப்பட்டு வருகின்றன.