ரூ.1000-க்கு மேல் கரண்ட் பில்.. அப்போ இனி இப்படித்தான் பணம் கட்டணும்.. வருகிறது புது ரூல்ஸ்!

சென்னை:
மின்சாரக் கட்டணம் 1000 ரூபாய்க்கு மேல் வந்தால் இனி ஆன்லைனில் மட்டுமே பணம் கட்ட முடியும் என்கிற புதிய விதி விரைவில் அமலுக்கு வரும் என தமிழ்நாடு மின்சார வாரிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மத்திய அரசு கடந்த சில ஆண்டுகளாகவே டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை ஊக்குவித்து வருகிறது. முதலில் இது பெரிய அளவில் மக்களை சென்றடையவில்லை. ஆனால், கொரோனா காலக்கட்டத்துக்கு பிறகு பலர் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைக்கு மாறினர். ரூபாய் நோட்டுகள் மூலம் கொரோனா வைரஸ் பரவும் என்ற அச்சமே இதற்கு முக்கிய காரணம் என சொல்லலாம்.

இவ்வாறு சிலர் டிஜிட்டல் பரிவர்த்தனையை நோக்கி செல்ல தொடங்கினாலும், பெரும்பாலான மக்கள் சாதாரண பணப்பரிவர்த்தனையை தான் மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக, முதியவர்கள், படிப்பறிவு இல்லாதவர்கள், கிராமத்தினர் ஆகியோர் இன்னமும் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைக்கு மாறவில்லை.

ரூ.1000-க்கு மேல் பில்..
இந்நிலையில்தான், தமிழ்நாடு மின்சார வாரியத்தில் ஒரு புதிய விதிமுறை அமலுக்கு வரவுள்ளதாக உயரதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அதாவது ரூ.1000-க்கும் மேல் (372 யூனிட்) மின் கட்டணம் வரும் பட்சத்தில், மின்வாரிய அலுலகத்துக்கு சென்று கவுன்ட்டரில் இனி பணம் செலுத்த முடியாதாம். ஆன்லைனில் மட்டும்தான் கட்ட வேண்டுமாம். அப்படி ஆன்லைனில் பணம் செலுத்த முடியாதவர்கள், வரைவோலை அல்லது காசோலை மூலமாகவே பணம் கட்ட முடியும்.

ஏற்கனவே உள்ள ரூல்ஸ்..
தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் இந்த விதிமுறையை சமீபத்தில் முன்மொழிந்துள்ளதாக தெரிகிறது. இதற்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்தால் மேற்குறிப்பிட்ட நடைமுறை அமலுக்கு வரும். ஏற்கனவே தற்போது ரூ.5 ஆயிரத்துக்கு மேல் மின் கட்டணம் வந்தால், ஆன்லைனிலோ அல்லது வரைவோலை மூலமாகவோ மட்டுமே பணம் செலுத்தும் முறை அமலில் உள்ளது. இதை 1000 ரூபாயாக மாற்ற மின்சார ஒழுங்குமுறை ஆணையம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

ஆன்லைனில் எளிதாக கட்டலாம்..
தமிழ்நாடு மின்சார வாரியம், டிஜிட்டல் பரிவர்த்தனை மூலமாக மொத்த வருவாயில் 74 சதவீதத்தை வசூலித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆன்லைனில் பணம் செலுத்துபவர்கள் முதலில் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் வலைதளப் பக்கமான https://www.tnebnet.org/awp/login?locale=en-க்கு உள்ளே செல்ல வேண்டும். ஏற்கனவே லாக் இன் (Log In) ஐடி இருப்பவர்கள், அப்படியே உள்ளே சென்று பணம் செலுத்தலாம். இல்லையெனில், quick pay என்ற ஆப்ஷனுக்குள் சென்று 2 இலக்க மண்டல எண் மற்றும் 9 இலக்க வாடிக்கையாளர் எண்ணை பதிவு செய்ய வேண்டும். பின்னர் ஏடிஎம் கார்டு நம்பர், மொபைல் பேக்கிங், கூகுள் பே, போன் பே உள்ளிட்டவற்றில் ஏதேனும் ஒன்றை பயன்படுத்தி பணம் செலுத்த முடியும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.