படம் படுதோல்வி, மன்னிப்பு கேட்ட தயாரிப்பாளர்

தெலுங்குத் திரையுலகின் வாரிசு நடிகர்களில் ஒருவர் அகில். நட்சத்திரத் தம்பதிகளான நாகார்ஜுனா, அமலா ஆகியோரின் மகன். தெலுங்கில் 2015ல் வெளிவந்த 'அகில்' படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். அதற்குப் பின் நான்கைந்து படங்களில் நாயகனாக நடித்திருந்தாலும் இன்னும் முன்னணி கதாநாயகர்களின் வரிசையில் இடம் பிடிக்க முடியாமல் தடுமாறி வருகிறார்.

அவர் நாயகனாக நடித்த 'ஏஜன்ட்' என்ற தெலுங்குப் படம் கடந்த வாரம் வெளிவந்தது. படத்திற்கு மோசமான வரவேற்பும், வசூலும் கிடைத்து முதல் நாளிலேயே படத்தைப் படுதோல்வி படம் என்று சொல்லிவிட்டார்கள்.

படத்தின் தயாரிப்பாளரான அனில் சுங்கரா படம் வெளியான இரண்டு நாளிலேயே படத்தின் தோல்விக்காக ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். நேற்று டுவிட்டரில், “ஏஜன்ட்டின் முழு பழியையும் நானே ஏற்க வேண்டும். இது மேல்நோக்கிய பணி என்று எங்களுக்குத் தெரிந்திருந்தும் நாங்கள் வெற்றி பெற நினைத்தோம். ஆனால், அதை செய்யத் தவறிவிட்டோம்.

படத்திற்காக முழுமையான ஸ்கிரிப்ட் இல்லாமல், படத் தொடங்குவதில் சில பிரச்சினைகளையும் வைத்துக் கொண்டு கோவிட்டையும் எதிர் கொண்டோம். எந்தவிதமான சாக்குபோக்கையும் சொல்ல விரும்பவில்லை. இந்த விலையுயர்ந்த தவறிலிருந்து பாடம் கற்றுக் கொண்டுள்ளோம். இதுபோன்ற தவறுகளை மீண்டும் செய்ய மாட்டோம். எங்கள் மீது நம்பிக்கை வைத்திருந்த அனைவரிடமும் மனப்பூர்வமான மன்னிப்பைக் கேட்கிறோம். எங்களது எதிர்கால திட்டங்களில் அர்ப்பணிப்புடன் திட்டமிடல் மற்றும் கடின உழைப்புடன் இழப்புகளை ஈடு செய்வோம்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

படம் வெளியான சில தினங்களிலேயே இப்படி தோல்விக்காக ஒரு தயாரிப்பாளர் காரணத்தையும், மன்னிப்பையும் கேட்டிருப்பது தெலுங்கு திரையுலகத்தினரிடம் மட்டுமல்லாது மற்ற மொழித் திரையுலகத்தினரிடமும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.