புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் வடசேரிப்பட்டியில் இன்று (மே 2) ஜல்லிக்கட்டில் வாடிவாசல் தடுப்புக் கட்டையின் மோதி முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் காளை படுகாயம் அடைந்தது. மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
புதுக்கோட்டை அருகே வடசேரிப்பட்டி பிடாரி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவையொட்டி இன்று ஜல்லிக்கட்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டை இலுப்பூர் கோட்டாட்சியர் குழந்தைசாமி தொடங்கி வைத்தார். இந்த ஜல்லிக்கட்டில் புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த காளைகள் ஒன்றன் பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டன. அப்போது, ஜல்லிக்கட்டில் அதீத ஆர்வம் கொண்ட சி.விஜயபாஸ்கரால் வளர்க்கப்பட்டு வந்த கருப்புக் கொம்பன் காளையும் அவிழ்த்துவிடப்பட்டது.
தன்னுடைய காளை வாடிவாசலில் இருந்து வெளியேறி வருவதை ஆர்வத்தோடு மேடையில் இருந்து பார்த்துக்கொண்டு இருந்தபோது, சீறிப் பாய்ந்த கருப்புக் கொம்பன் எனும் காளையானது வாசலில் உள்ள தடுப்புக் கட்டையில் மோதி நிலை தடுமாறி அதே இடத்தில் சரிந்தது. தன் தலைமீது கை வைத்து சி.விஜயபாஸ்கர் சோகத்தை வெளிப்படுத்திய நிலையில், ஆரவாரத்தோடு காணப்பட்ட ஜல்லிக்கட்டு களமானது கண் இமைக்கும் நேரத்தில் நடந்த இந்த சம்பவத்தைக் கண்டு ஜல்லிக்கட்டு களமே அமையானது. பின்னர், காளையின் மீது தண்ணீர் தெளிக்கப்பட்டது.
பலத்த காயங்களோடு உயிருக்கு போராடிக் கொண்டிருந்த காளையை மீட்டு ஒரத்தநாடு கால்நடை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து மருத்துவமனை மருத்துவர் ஒருவரிடம் கேட்டபோது, காயம் அடைந்த காளை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது. தலையில் அடிபட்டுள்ளது. மயக்க நிலையில் உள்ளது. தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது” எனத் தெரிவித்தார்.
இதபோன்று, கடந்த 2018-ல் இலுப்பூர் அருகே திருநல்லூரில் (தென்னலூர்) தனது கொம்பன் காளையானது வாடிவாசல் தடுப்புக் கட்டையில் மோதி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. புதுக்கோட்டை திருவப்பூரில் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் அவிழ்த்துவிடப்பட்ட கருப்புக் கொம்பன் காளையானது காணாமல் போய்விட்டது. இரு நாட்களுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்டது.
”திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் ஜல்லிக்கட்டில் கருப்புக் கொம்பன் காணாமல் போன தகவல் என்னை கலங்கச் செய்தது. 2 நாட்கள் தேடுதலுக்குப் பிறகு இல்லம் வந்தது. அவனை (கருப்புக் கொம்பன்) அரவணைத்து மகிழ்ந்தேன். ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத் தேர்தலில் 20 நாட்கள் களப்பணியாற்றிய களைப்பு பறந்தே போனது” என காயம் அடைந்த காளையைப் பற்றி தனது முகநூல் பக்கத்தில் அடுத்த சில நாட்களில் சி.விஜயபாஸ்கர் பதிவிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.