கடல் வளங்களை பயன்படுத்தினால் பேரிடர்களை எதிர்கொள்ளலாம்: மூத்த விஞ்ஞானி சிவதாணுப் பிள்ளை பரிந்துரை

சென்னை: பருவநிலை மாற்றத்தின் அச்சுறுத்தல்களை சமாளிக்க கடல் வளங்களை நாம் முழுமையாகப் பயன்படுத்த வேண்டும் என்று மூத்த விஞ்ஞானி சிவதாணுப் பிள்ளை பரிந்துரை செய்துள்ளார்.

உலக அளவில் பருவநிலை மாற்றம் மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது. தொழிற்சாலைகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் எண்ணெய், எரிவாயு, நிலக்கரி போன்ற புதைபடிவ எரிபொருட்களை எரிக்கும்போது கார்பன் டை ஆக்சைடு போன்ற பசுமை இல்ல வாயுக்கள் வெளியேறுகின்றன. இவ்வாறு அதிக அளவு வாயு வெளியேறும்போது வெப்பமானது வெளியே செல்லாமல் பூமியிலேயே தங்கிவிடுவதால் புவி வெப்பமடைகிறது. இதன் விளைவாக கடல் நீர் மட்டம் உயர்வு, எதிர்பாராத கனமழை, காற்று, நீர் மாசுபடுதல், புயல் உள்ளிட்ட இயற்கை பேரிடர்கள் ஏற்படுகின்றன.

அதேபோல் 2100-ம் ஆண்டுக்குள் சென்னை உட்பட பெரும்பாலான கடலோர நகரங்கள் தண்ணீரில் மூழ்கும் நிலை உருவாகும் என்று அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர். இதைத் தவிர்க்க புவி வெப்பநிலை உயர்வை 1.5 டிகிரிக்கு கீழே கட்டுப்படுத்த வேண்டும். இதற்கான திட்டமிடல் மிகவும் முக்கியம். அந்தவகையில் பூஜ்ஜியம் கார்பன் நிலையை இந்தியா அடைய 2070-ம் ஆண்டினை இலக்காக நிர்ணயித்து பல்வேறு செயல்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளைத் தவிர்க்க தொலைநோக்குடன் சில பரிந்துரைகளை மூத்த விஞ்ஞானியும், பிரம்மோஸ் மையத்தின் நிறுவனருமான சிவதாணுப் பிள்ளை முன்வைத்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:

ஒரு நாட்டின் பொருளாதாரம் எந்த அளவுக்கு முக்கியமோ அதேபோல் மக்களைப் பாதுகாப்பதும் அவசியம். இதனால், அமெரிக்காவில் தண்ணீர் அதிக அளவில் தேவைப்படும் தொழிற்சாலைகளை அமைப்பதில்லை. இஸ்ரேலில் வேளாண்மைக்கு தண்ணீர் பயன்பாட்டு அளவை நிர்ணயிக்க செயற்கைக்கோள்கள் மூலம் திட்டமிடுகின்றனர்.

எதிர்கால தேவையைக் கருத்தில்கொண்டு இத்தகைய திட்டங்களை இந்திய அரசும் முன்னெடுக்க வேண்டும், குறிப்பாக கடல் வளங்களை முழுமையாகப் பயன்படுத்துவதற்கான திட்டங்களை நாம் வகுக்க வேண்டும். நிலத்தில் இருந்து குடிநீரை எடுக்காமல் கடல்நீரை மாற்றி பயன்படுத்த வேண்டும். அதேபோல் செயற்கைக்கோள்களை பயன்படுத்தி நீர்மட்ட உயர்வு, நீர் மேலாண்மை, கால நிலை மாற்றம், மணல் பகுப்பாய்வு உள்ளிட்டவற்றை கணக்கிட வேண்டும்.

மேலும், கடலில் ‘ஆற்றல் தீவு’என்கிற ஒரு மிதக்கும் தீவை உருவாக்க அரசுக்கு பரிந்துரைத்துள்ளோம். ஏனெனில் கடலில் காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் காற்றாலை மூலம் ஆற்றலை எளிதில் சேமிக்க முடியும். அதேபோல் சோலார் மூலமும் அதிக அளவு ஆற்றலை உற்பத்தி செய்யலாம். முக்கியமாக நாம் உருவாக்கக் கூடிய ஹைட்ரஜன் ஆற்றல்களை எல்லாம் சேமித்து வைப்பதற்கு கடல்தான் ஏற்ற இடம்.

நிலங்களில் சோலார் பேனல்கள் அமைத்து மின்சாரத்தை சேமிக்கும் முறையில், சூரிய ஒளி கிடைக்கும்போது மட்டுமே ஆற்றல் பெறப்படுகிறது. ஆனால் மழை பெய்யும் காலங்களில் இடையூறு ஏற்படும். இதையே செயற்கைக்கோளின் மீது நிறுவினால் 24 மணி நேரமும் சூரிய ஒளி தடையின்றி கிடைக்கும். அதிக அளவு ஆற்றலும் சேமிக்கப்படும். இந்த ஆற்றலை மைக்ரோ அலைகளாக மிதக்கும் தீவுக்கு அனுப்பி, அங்கிருந்து மின்சாரமாக மாற்றி பயன்படுத்தலாம். இதை செய்வதற்கான அடிப்படை தொழில்நுட்ப வசதிகள் இந்தியாவிடம் இருக்கிறது.

அடுத்த 50 ஆண்டுகளில் பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு ஏற்படும். அதற்கு மாற்றாக ஹைட்ரஜன் எரிபொருள் பயன்படுத்தப்படும். ஹைட்ரஜன் ஆற்றலானது கார்பனை வெளியிடாது. இதனால், சவுதி அரேபியாவில் தற்போதே ஹைட்ரஜன் எரிபொருள் நிலையத்தை அமைக்கும் பணியைத் தொடங்கி விட்டனர். இதற்கான ஆய்வுகளை நாமும் மேற்கொள்ளவேண்டும்.

வருங்காலத்தில் தொழில் நுட்பத்தின் மூலம் பொருளாதார புரட்சி ஏற்படும்போது இந்தியா உலக நாடுகளின் எதிர்காலமாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.