மான்ட்ரீல்: பஞ்சாப் பாடகர் சித்து மூசேவாலா கொலை வழக்கில், மூளையாக செயல்பட்ட தாதா கோல்டி பிரார் என்ற சதீந்தர் சிங் பிராரை, ‘தேடப்படும் டாப் – 25 குற்றவாளிகள்’ பட்டியலில், கனடா அரசு சேர்த்து உள்ளது.
பஞ்சாபின் மன்சா மாவட்டத்தில் உள்ள மூசே கிராமத்தில், 2022 ஜூன் 29ல், பிரபல பாடகர் சித்து மூசேவாலா சுட்டுக் கொல்லப்பட்டார். இதன் பின்னணியில், வட அமெரிக்க நாடான, கனடாவில் வசிக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தாதாகோல்டி பிரார் இருப்பதுதெரிய வந்தது.
சிறையில் உள்ள தன் கூட்டாளி லாரன்ஸ் பிஷ்னோய் உடன் சேர்ந்து, சித்து மூசேவாலாவை, கூலிப்படை உதவியுடன், கோல்டி பிரார் கொலை செய்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. கோல்டி பிராருக்கு எதிராக, ஏற்கனவே ‘ரெட் கார்னர் நோட்டீஸ்’ பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில்,கனடாவில், ‘தேடப்படும் டாப் – 25 குற்றவாளிகள்’ பட்டியலில், கோல்டி பிரார் பெயரும் இடம் பெற்றுள்ளது. இதில், 13வது இடத்தில் அவரது பெயர் உள்ளது. ரஜத் குமார், குர்லால் சிங் ஆகியோரை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியதாக கோல்டி பிரார் மீது குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.
மேலும், சித்து மூசேவாலாவைக் கொலை செய்ய உத்தரவிட்டதாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. கோல்டி பிரார் கனடாவில் பதுங்கி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement