வட்டார கல்வி அதிகாரி தேர்வு அறிவிப்பு வெளியாவதில் தாமதம்: ஆசிரியர் தேர்வு வாரியம் மீது அதிருப்தி

சென்னை: வட்டார கல்வி அதிகாரி தேர்வுக்கான அறிவிப்பு இன்னும் வராததால் பி.எட்.பட்டதாரிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

தமிழக தொடக்க கல்வித் துறையில் வட்டார கல்வி அதிகாரி (பிஇஓ) பணியிடங்களில் 50 சதவீதம் பதவி உயர்வு மூலமாகவும், 50 சதவீதம் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நேரடி நியமன முறையிலும் நிரப்பப்படுகின்றன. அரசு நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வு மூலமாக வட்டார கல்வி அதிகாரி ஆகின்றனர். நேரடி நியமனத்துக்கு, ஆசிரியர் தேர்வு வாரியம் போட்டித் தேர்வு நடத்துகிறது. தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், விலங்கியல், தாவரவியல், வரலாறு உள்ளிட்ட பாடங்களில் பட்டப் படிப்பு, பி.எட். பட்டம் பெற்றவர்கள் இத்தேர்வை எழுதலாம்.

நேரடியாக இப்பணிக்கு வருபவர்கள் குறிப்பிட்ட ஆண்டுகளில் அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெறுகின்றனர். அதன்பிறகு, மாவட்ட கல்வி அதிகாரி, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி என படிப்படியாக பதவி உயர்வு பெறலாம்.

இந்த நிலையில், வட்டார கல்வி அதிகாரி நியமனத்தில் 23 காலியிடங்களை நேரடியாக நிரப்புவதற்கான அறிவிப்பு 2023 பிப்ரவரியில் வெளியிடப்பட்டு, மே மாதம் போட்டித் தேர்வு நடத்தப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியத்தின் வருடாந்திர தேர்வுக் கால அட்டவணையில் கூறப்பட்டிருந்தது. ஆனால், பிப்ரவரி கடந்து 2 மாதங்கள் ஆகியும் தேர்வுக்கான அறிவிப்பை வாரியம் வெளியிடவில்லை.

கடந்த 2020 பிப்ரவரியில் நடத்தப்பட்ட வட்டார கல்வி அதிகாரி தேர்வின் முடிவுகள் கடந்த 2022 பிப்ரவரியில் வெளியிடப்பட்டன. அத்தேர்வில் நூலிழையில் வாய்ப்பை இழந்தவர்களும், கடந்த ஆண்டு பி.எட். முடித்தவர்களும் புதியதேர்வை எதிர்நோக்கி தயாராகி வரும் நிலையில், தேர்வு அறிவிப்பை வெளியிடாமல் வாரியம் தாமதம் செய்வது, பி.எட். பட்டதாரிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையே, பதவி உயர்வு மூலம் 40 வட்டார கல்வி அதிகாரி பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மாநில தொடக்க கல்வி இயக்குநர் ஜி.அறிவொளி நேற்று தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.