சென்னை:
நாடு முழுவதும் பெரும் சர்ச்சைக்குள்ளாகி இருக்கும் ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்தை தமிழகத்தில் வெளியிட வேண்டாம் என உளவுத்துறை எச்சரிக்கை விடுத்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவில் கும்பாபிஷேக விழாவில் முஸ்லிம் ஜமாத் நிர்வாகிகள்…!
திரைப்படமே வெளியாகாமல் வெறும் ட்ரெய்லர் மூலமே சர்ச்சையை ஏற்படுத்திய திரைப்படங்கள் அரிதிலும் அரிது. அப்படியொரு திரைப்படம்தான் தி கேரளா ஸ்டோரி. பாலிவுட் இயக்குநர் சுதிப்தா சென் இயக்கத்தில் அதா சர்மா, பிரணவ் மிஷ்ரா, யோகிதா பிஹானி உள்ளிட்ட பிரபல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
கேரளாவில் இந்து மதத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பெண்கள், மதமாற்றம் செய்யப்பட்டு ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்பதுதான் இந்த திரைப்படத்தின் மையக்கரு. இது ட்ரெய்லரிலேயே தெரிவிக்கப்படுவதுடன், உண்மைக் கதை என்றும் கூறப்பட்டிருக்கிறது.
கேரளாவில் கடும் எதிர்ப்பு:
இதுதான் கேரளாவில் பெரும் புயலை கிளப்பி இருக்கிறது. இதுபோன்ற எந்தவொரு சம்பவமும் கேரளாவில் நடக்கவில்லை என்றும், மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் ஒரே நோக்கில் இந்த திரைப்படம் எடுக்கப்பட்டிருப்பதாகவும் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் தெரிவித்து வருகின்றனர். அரசியல் ரீதியாக கேரளாவில் காலூன்ற முடியாத பாஜக, திரைப்படங்களில் வாயிலாக பொய் பிரச்சாரத்தில் ஈடுபட்டு உள்ளே நுழைய பார்க்கிறது என அவர்கள் விமர்சித்து வருகின்றனர்.
சங்பரிவாரங்களின் சதி..
இதுதொடர்பாக சில தினங்களுக்கு பேசிய கேரளா முதல்வர் பினராயி விஜயன், “கேரளாவில் வெறுப்பு மற்றும் பிரிவினைவாதத்தை ஏற்படுத்துவதற்காக சங்பரிவாரங்கள் திட்டமிட்டு இந்த திரைப்படத்தை எடுத்திருக்கிறார்கள்” என கடுமையாக விமர்சித்தார். கேரளா மட்டுமல்லாமல் நாடு முழுவதுமே ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்தின் ட்ரெய்லர் சர்ச்சையாகி உள்ளது.
உச்ச நீதிமன்றம் தள்ளுபடி:
முஸ்லிம்கள் மீது வெறுப்புணர்வை தூண்டும் இந்த திரைப்படம் எடுக்கப்பட்டிருப்பதாக பல அரசியல் கட்சிகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதனிடையே, இந்த திரைப்படத்தை வெளியிட தடைவிதிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், இந்த மனுவை உச்ச நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது. இதனால் இந்த திரைப்படம் நாளை மறுதினம் (மே 5) வெளியாவது உறுதியாகி உள்ளது.
உளவுத்துறை எச்சரிக்கை:
எனினும், கேரளா அரசு இந்த திரைப்படத்துக்கு தடைவிதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தை தமிழகத்தில் வெளியிடுவது தொடர்பாக உளவுத்துறை தற்போது எச்சரிக்கை விடுத்துள்ளது. கேரளாவை போலவே இந்த திரைப்படத்திற்கு தமிழகத்திலும் கடும் எதிர்ப்பு காணப்படுகிறது. எனவே, தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தை தமிழகத்தில் வெளியிட்டால் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. எனவே, இந்த திரைப்படத்தை வெளியிட அனுமதிக்க வேண்டாம் என தமிழக அரசுக்கு உளவுத்துறை ரிப்போர்ட் அளித்துள்ளது.