திருவாரூர் மாவட்டத்தில் தண்ணீர் பாத்திரத்திற்குள் தவறி விழுந்த இரண்டு வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் மாவட்டம் தென்குவளைவெளி பகுதியை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி கீதா. இவர்களது மகன் துருவன் (2). இந்நிலையில் குழந்தை துருவன் நேற்று வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக தவறி தண்ணீர் பிடித்து வைத்திருந்த பாத்திரத்திற்குள் விழுந்துள்ளான்.
இதையடுத்து விளையாடிக் கொண்டிருந்த குழந்தையைக் காணவில்லை என்று கீதா துருவனை தேடியுள்ளார். அப்பொழுது குழந்தை துருவன் தண்ணீர் பாத்திரத்திற்குள் கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதைத்தொடர்ந்து உடனடியாக பக்கம் பக்கத்தினர் உதவியுடன் குழந்தையை மீட்டு சிகிச்சைக்காக ஆலங்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றார்.
ஆனால் அங்கு பரிசோதனை செய்த மருத்துவர் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.