சிட்னி: உலகில் அதிக ஆபத்தான விலங்குகளில் ஒன்றாகக் கருதப்படும் முதலை தாக்குதலால் மிக மோசமான ஒரு ஷாக் சம்பவம் நடந்துள்ளது.
உலகின் மிக முக்கியமான தீவு நாடு ஆஸ்திரேலியா. உலகின் மற்ற கண்டங்களில் இருந்து பிரிந்து இருக்கும் ஆஸ்திரேலியாவில் பல்வேறு வகையான தனித்துவமான உயிரினங்கள் இருக்கவே செய்கிறது.
ஆஸ்திரேலியா என்றவுடன் பலருக்கும் ஞாபகம் வருவது கங்காருக்கள் தான்.. கங்காருக்கள் தவிர முதலைகள், விஷ பாம்புகள் என பல வகை உயிரினங்களும் அங்கே இருக்கவே செய்கிறது.
முதலைகள்: அதிலும் குறிப்பாக அங்கே முதலைகள் மிகவும் அதிகம். எங்குப் பார்த்தாலும் முதலைகள் தான் இருக்கும். கோடைக் காலங்களில் வெயிலுக்குப் பயந்து வீடுகளில் இருக்கும் நீச்சல் குளங்களில் கூட அவை வந்து படுத்துக்கொள்ளும். அந்தளவுக்கு அங்கே முதலைகள் பிரச்சினை பெரிய பிரச்சினையாக மாறியுள்ளது. வாழ்விடங்கள் சுருங்கி வருவதால் மனித மிருக மோதல்களும் அதிகரிக்கிறது.
இதனால் பல நேரங்களில் மனிதர்களும் கூட முதலைகள் தாக்குதலுக்குப் பலியாகிறார்கள். இதனிடையே அங்கே ஒரு ஷாக் சம்பவம் நடந்துள்ளது. முதலைகள் நிறைந்த நீரில் மீன்பிடிக்கச் சென்றபோது காணாமல் போன ஒருவர் இரண்டு நாட்களுக்குப் பின்னர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அதுவும் முழு உடல் மீட்கப்படவில்லை. உடலின் பாகங்கள் மட்டுமே கண்டறியப்பட்டுள்ளது.
அங்கே முதலை தாக்குதலால் உயிரிழந்த இந்த நபர் கெவின் டார்மோடி என்று அடையாளம் காணப்பட்டுள்ளார். 65 வயதான அவர், சனிக்கிழமையன்று வடக்கு குயின்ஸ்லாந்தில் ஒரு பகுதிக்கு மீன்பிடிக்கச் சென்றுள்ளார். மீன்பிடிக்க ஆரம்பித்த உடன் முதலை ஒன்று வந்த நிலையில், அதை அவர் விரட்டியடித்ததாகக் கூறப்படுகிறது.
முதலையை விரட்டியடிக்க அவர் சத்தமாகக் கத்தியுள்ளார். மேலும், தண்ணீரில் தொடர் அலைகளையும் ஏற்படுத்தி அவர் அலைகளை உருவாக்கியுள்ளார். இதனால் முதலை அங்கிருந்து சென்றுவிட்டது.
மாயம்: அந்த குழு அதன் பின்னர் வழக்கம் போல மீன்பிடித்த நிலையில், அவர் எதிர்பாராத விதமாக மாயமாகியுள்ளார். எங்குத் தேடியும் அவரை கண்டறிய முடியவில்லை. இதையடுத்து போலீசாருக்கு அவர்கள் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசாரும் அவரை தேடியுள்ளனர்.
இப்படியே இரண்டு நாட்களுக்குத் தேடுதல் வேட்டை நடந்துள்ளது. அப்போது அங்கே இரண்டு முதலைகள் ஏதோ ஒன்றைத் தின்று கொண்டிருந்ததை ரேஞ்சர்கள் பார்த்துள்ளனர். இதையடுத்து அவர்கள் 4.2 மீட்டர் (14 அடி) மற்றும் மற்றொன்று 2.8 மீட்டர் (ஒன்பது அடி) இரு முதலைகளைச் சுட்டுக் கொன்றனர்.
சடங்கள்: இதையடுத்து அங்கே இருந்த எச்சங்களை ஆய்வு செய்த போது, அவை மனித எச்சங்கள் என்பது தெரிய வந்தது. இது உண்மையாகவே மிகவும் சோகமான நிகழ்வு என்றே ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
வடக்கு குயின்ஸ்லாந்தின் கிராமப்புற நகரமான லாராவைச் சேர்ந்த அந்த நபர் மறைவால் அந்த கிராமமே சோகத்தில் ஆழ்ந்துள்ளதாம்.
முதலை, பாம்பு போன்ற வனவிலங்குகளிடம் பொதுமக்கள் எதனால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதை விளக்குவதாக இந்தச் சம்பவம் இருப்பதாக அங்குள்ள போலீசஸ் அதிகாரி தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், இது முதலைகள் நாடு. நீங்கள் தண்ணீரில் இருந்தால், குறிப்பாக முதலை பாதுகாப்பு மண்டலமாக இருந்தால், அங்கே நிச்சயம் முதல்கள் அதிகமாக இருக்கும். எனவே, அங்கே எச்சரிக்கையாக இருக்க வேண்டும்” என்றார்.