காலி முகத்திடல் ஷங்ரிலா பசுமை மைதானம் மற்றும் ஜனாதிபதி அலுவலக வளாகத்தில் விசேட வெசாக் நிகழ்ச்சி இன்று ஆரம்பம்

புத்த ரஷ்மி தேசிய வெசாக் கொண்டாட்டத்தை முன்னிட்டு, காலி முகத்திடல் ஷங்ரிலா பசுமை மைதானம் மற்றும் ஜனாதிபதி அலுவலக வளாகத்தில் மே 03, 04, 05 மற்றும் 06 ஆம் திகதிகளில் வெசாக் தோரணங்கள், வெசாக் கூடுகள், பக்திப் பாடல்கள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இன்று (03) மாலை 7.00 மணிக்கு ஜனாதிபதி அலுவலக படிக்கட்டுகளுக்கு முன்பாக வண்ணமயமான பக்திப் பாடல் நிகழ்ச்சி நடைபெறவுள்ளதுடன், இந்நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் பங்கேற்க உள்ளார்.

மே 04 ஆம் திகதி அதே இடத்தில் பக்திப் பாடல் நிகழ்வும் நடைபெற உள்ளது.

மே 05 ஆம் திகதி, ஷங்ரிலா பசுமை மைதானத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள மேடையில் நாற்பது பிக்கு மாணவர்கள் மற்றும் 1200 மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் விநியோகிக்கப்படும்.

சிங்கப்பூரின் மகா கருணா பௌத்த சங்கமும் சிங்கப்பூரின் விலிங் ஹார்ட்ஸ் (Wiling Hearts) அறக்கட்டளையும் இணைந்து ஏற்பாடு செய்யும் வெசாக் அன்னதான நிகழ்வு, அன்றைய தினம் இரவு 7.00 மணிக்கு ஷங்கிரிலா பசுமை மைதானத்தில் நடைபெறவுள்ளதுடன், அது மே 05 மற்றும் 06 ஆம் திகதிகளிலும் தொடர்ந்து நடைபெறும்.

இதற்கு இணையாக மின்விளக்கு அலங்காரத் தோரணங்கள் காட்சிப்படுத்தப்படவுள்ளதுடன், இலங்கை கடற்படை, சிவில் பாதுகாப்புப் படை, இளைஞர் சேவைகள் மன்றம் மற்றும் இலங்கை இராணுவ பக்திப் பாடல் குழுக்களினால் நிகழ்த்தப்படும் பக்திப் பாடல் நிகழ்ச்சி ஷங்ரிலா பசுமை மைதானத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள மேடையில் மே 05 மற்றும் 06 ஆம் திகதிகளில் இடம்பெறும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.