சென்னை: Manaobala Passed Away (மனோபாலா உயிரிழந்தார்) இயக்குநரும், நடிகருமான மனோபாலா உயிரிழந்ததை அடுத்து அவரது இறப்புக்கு நடிகர் கருணாஸ் தனது இரங்கலை தெரிவித்திருக்கிறார்.
இயக்குநர் இமயம் பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராக இருந்தவர் மனோபாலா. அவரிடம் பல படங்கள் பணியாற்றிய அவர், ஆகாய கங்கை படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து விஜயகாந்த்தை வைத்து சிறைப்பறவை, மூன்று எழுத்தில் என் மூச்சு இருக்கும், ரஜினிகாந்த்தை வைத்து ஊர்க்காவலன் என 20க்கும் மேற்பட்ட படங்களை இயக்கினார். தமிழ் மட்டுமின்றி ஹிந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் படங்களை இயக்கியிருக்கிறார் மனோபாலா.
இயக்குநர் மட்டுமில்லை நடிகரும்கூட: இயக்குநராக ஜொலித்து மட்டுமின்றி பல படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்திலும் நடித்திருக்கிறார். அவரது இயல்பான நடிப்பை பார்த்த ரசிகர்கள் அவரது நடிப்புக்கும் ரசிகர்களாக மாறினர். குறிப்பாக வடிவேலு, சந்தானம் உள்ளிட்டோருடன் இணைந்து நடித்த அவர் கொன்றால் பாவம் மற்றும் கோஷ்டி ஆகிய படங்களில் நடித்திருந்தார். இதற்கிடையே சதுரங்க வேட்டை என்ற படத்தின் மூலம் தயாரிப்பாளர் அவதாரமும் எடுத்திருந்தார்.
உயிரிழந்த மனோபாலா: இந்தச் சூழலில் அவருக்கு கல்லீரல் பிரச்னை இருந்ததாக கூறப்படுகிறது. இதனையொட்டி அவர் அப்போலோவில் சில நாள்களுக்கு முன்பு அனுமதிக்கப்பட்டிருந்தார். அதன் பிறகு வீட்டுக்கு திரும்பிய அவர் வீட்டில் இருந்தபடியே சிகிச்சையில் இருந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி எல்.வி.பிரசாத் சாலையில் இருக்கும் அவரது வீட்டில் உயிரிழந்தார். அவரது உயிரிழப்பு திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.
கருணாஸ் இரங்கல்: மனோபாலாவின் உயிரிழப்புக்கு திரையுலக பிரபலங்கள் தங்களது இரங்கலை தெரிவித்துவருகின்றனர். அந்தவகையில் நடிகர் கருணாஸ் தெரிவித்துள்ள இரங்கலில், “மனோபாலாவின் மரணம் பேரதிர்ச்சியாக இருக்கிறது. அனைவருக்கும் உதவும் குணம் கொண்டவர். யார் வேண்டுமானாலும் அவரை எளிதில் அணுகலாம். மிகச்சிறந்த இயக்குநராகவும் மனோபாலா திகழ்ந்தார்.
சிறந்த தயாரிப்பாளர்: நடிகராக மட்டுமின்றி சதுரங்க வேட்டை என்ற தரமான படத்தை தயாரித்தார். இன்று அந்தப் படத்தின் இயக்குநர் எவ்வளவு உயர்ந்த இடத்தில் இருக்கிறார் என்பது நம் அனைவருக்குமே தெரியும். காதல் கொண்டேன் படத்தை நாங்கள் இருவரும் தேனியில் பார்த்தோம். படத்தை பார்த்த உடன் செல்வராகவனுக்கும், தனுஷுக்கும் உடனே தொலைபேசியில் அழைத்து வாழ்த்து சொன்னார். நான் அப்போது நடிக்க வந்த புதிது. என்னையும் அவர்களிடம் பேச வைத்தார்.
யாருக்கும் தெரியாமல் உதவி: அவர் யாருக்கும் தெரியாமல் பல உதவிகள் செய்ததை நான் கண்கூடாக பார்த்தவன். தயாரிப்பாளர் தேனப்பன் அலுவலகத்தில் நாங்கள் அடிக்கடி சந்தித்துக்கொள்வோம். ரொம்பவே செண்ட்டிமெண்ட்டானவர். சின்ன விஷயமாக இருந்தாலும் அதை பகிர்ந்துகொள்வார். எந்த ஊருக்கு சென்றாலும் அங்கு சிறந்த உணவை சொல்லி வாங்கி சாப்பிடு என கூறுவார். அவரது உயிரிழப்பு ரொம்பவே கஷ்டத்தை கொடுத்திருக்கிறது” என்றார்.