பொருளாதார ரகசியம் காக்கும் சீனா அதிபர் ஜின்பிங்கின் கறுப்பு பெட்டி தந்திரம்| Chinas President Xi Jinpings Black Box Tactic of Economic Secrecy

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

பீஜிங்: சீனாவின் பொருளாதார நிலையை வெளிநாடுகள் அறிந்து கொள்ள கூடாது என அந்நாட்டு அரசு நினைக்கிறது. எனவே, விமான பைலட் அறையில் உள்ள கறுப்பு பெட்டி ரகசியம் போல தங்கள் நாட்டு பொருளாதார ரகசியங்களையும் கட்டிக்காக்க, சீன அதிபர் ஷீ ஜின்பிங் நடவடிக்கைகளை அரங்கேற்றி வருகிறார்.

ரகசியங்களுக்கு பெயர் பெற்ற நாடு சீனா. கொரோனா தொற்று பரவலின் போது கூட, அந்நாட்டின் உண்மையான கள நிலவரங்கள் வெளி உலகுக்கு தெரியக் கூடாது என, சீன அரசு மறைத்து வந்தது. ராணுவம், பொருளாதாரம், மருத்துவம் உள்பட அனைத்து துறைகளிலும் ரகசியம் காப்பது சீனாவுக்கு கைவந்த கலை.

இந்நிலையில், உலகின் இரண்டாவது பெரிய பொருளாதார நாடான சீனாவில் தற்போது பொருளாதார சரிவு ஏற்பட்டுள்ளது. கொரோனா தொற்றுக்கு பிறகு ஏற்பட்ட வீழ்ச்சியில் இருந்து அந்நாடு இன்னும் முழுமையாக வெளிவரவில்லை. சீன பொருளாதாரம் குறித்து பல்வேறு நாடுகளிலும் விதவிதமான கருத்துக்கள் நிலவுகின்றன. குறிப்பாக, மேற்கத்திய நாடுகள் சீனாவில் அதிக முதலீடுகளை குவித்துள்ளன. இந்நிலையில் சீனாவின் தேசிய பாதுகாப்பு அவசியம் குறித்த அந்நாட்டு அதிபர் ஷீ ஜின்பிங் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறார்.

இதை தொடர்ந்து, சீனாவின் பல்வேறு பொருளாதார தரவுகளை உலக நாடுகள் கையாள, சீன அதிகாரிகள் கட்டுப்பாடுகள் விதித்துள்ளனர். குறிப்பாக பெருநிறுவன பதிவு குறித்த தகவல்கள், காப்புரிமைகள், கொள்முதல் ஆவணங்கள், கல்வி இதழ்கள், அதிகாரப்பூவ புள்ளிவிபர அறிக்கைகள் உள்ளிட்டவைகளை வெளிநாட்டு ஆய்வு நிறுவனங்கள் கையாளவும், ஆய்வு செய்யவும் கட்டுப்பாடுகள் போடப்பட்டுள்ளன.

latest tamil news

சீனாவின் பொருளாதார நிலை குறித்து ஷாங்காய் நகரை சேர்ந்த, ‘விண்ட் இன்பர்மேஷன்’ என்ற நிறுவனம், ஆய்வு மேற்கொண்டு வருகிறது. சர்வதேச அளவில் முதன்மையான இந்த நிறுவனம் வெளியிடும் தரவுகளை சீனா மட்டுமின்றி பல்வேறு நாடுகளை சேர்ந்த பொருளாதார நிபுணர்களும் பயன்படுத்தி கணிப்புகளை வெளியிடுகின்றனர்.

தற்போது தகவல் வெளியிடுவதில் கட்டுப்பாடுகள் வலுத்துள்ளதால், அந்த ஆய்வு நிறுவனத்திடம் இருந்து தகவல் பெறும் உரிமையை புதுப்பிக்க முடியாமல் பல்வேறு நாட்டு பொருளாதார ஆய்வு நிறுவனங்களும் ஸ்தம்பித்துள்ளன. விமானத்தில் பைலட் உரையாடல்களின் ரகசியம் பாதுகாக்கும் கறுப்பு பெட்டியை போல, தங்கள் நாட்டு பொருளாதார தரவுகளை பாதுகாக்க கண்ணுக்கு தெரியாத கறுப்பு பெட்டியை சீன அரசு உருவாக்கி உள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.