டாஸ்மாக்கால் தமிழக அரசு நடக்கவில்லை: சூடான அமைச்சர் செந்தில் பாலாஜி

மதுபானங்களை தானியங்கி இயந்திரங்கள் மூலம் விற்பனை செய்வது குறித்து தவறான கருத்துக்கள் பரப்பப்படுவதாக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.

சென்னை திருமங்கலத்தில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் மதுபானக் கடையின் உட்புறம் அமைக்கப்பட்டுள்ள தானியங்கி மதுபான விற்பனை இயந்திரங்களை பார்வையிட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி அதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், “தமிழ்நாட்டில் தற்போது 96 மதுபானக் கடைகள் மூடப்பட்டுள்ளன. 500 சில்லரை மதுபானக் கடைகள் மூடப்படும் என்று சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டது. அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. டாஸ்மாக் மதுபானக் கடை வருமானத்தின் மூலம் மட்டுமே தமிழ்நாடு அரசு செயல்படவில்லை.

பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை மதுபானக் கடைகள் செயல்படுகின்றன. மால்களில் உள்ள மதுபானக் கடைகளுக்கு உள்ளே தான் தானியங்கி மதுபான விற்பனை இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன. ஊழியர்களின் மேற்பார்வையில் தான் இவற்றை உபயோகிக்க முடியும். 21 வயதுக்கு குறைவானவர்கள் இதை பயன்படுத்த முடியாத வண்ணம் ஊழியர்கள் கண்காணிப்பார்கள். மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் தானியங்கி இயந்திரங்கள் மூலம் மதுபானங்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

அரசின் மீது எந்த குற்றச்சாட்டையும் முன்வைக்க முடியாத சில எதிர்கட்சிகள் சில ஊடகங்களில் திரித்து வெளியிடப்படும் செய்திகளை ஆதாரமாகக் கொண்டு அரசின் மீது குற்றச்சாட்டை வைக்கின்றன. 24 மணி நேரமும் தானியங்கி இயந்திரங்கள் மூலம் மதுபானங்கள் விற்பனை செய்வதாகவும், சிறுவர்களும் எளிதாக மதுபானங்களை பெறுவதற்கு வழி செய்வதாகவும் பொய்யான குற்றச்சாட்டை வைக்கின்றார்கள். இது முற்றிலும் தவறானது” என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.