தருமபுரியில் வனத்துறையினரின் அத்துமீறலை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும்: ராமதாஸ்

சென்னை: தருமபுரி மாவட்டத்தில் வனத்துறையினரின் அத்துமீறலை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை வைத்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,” தருமபுரி மாவட்டத்தில், குறிப்பாக பென்னாகரம் தொகுதியில் வனத்தையொட்டிய பகுதிகளில் உழவு செய்தும், கால்நடைகளை வளர்த்தும் பிழைத்து வரும் மக்களை அங்கிருந்து அகற்றும் பணிகளில் வனத்துறை ஈடுபட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. வனத்தை மட்டுமே நம்பி வாழும் ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை பறிக்கும் செயல்களில் வனத்துறையினர் ஈடுபடுவது கண்டிக்கத்தக்கது ஆகும்.

வனத்தை நம்பி வாழும் ஏழை மக்களுக்கு உதவியாக இருக்க வேண்டிய வனத்துறையினர் அவர்கள் மீது தொடர்ந்து அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விட்டு வருகின்றனர். கால்நடைகளை மேய்க்கும் மக்களையும், விறகு பொறுக்க வரும் பெண்களையும் உடலாலும், மனதாலும் கொடுமைப்படுத்துவது, அவர்களின் குடியிருப்புகளை தீயிட்டு எரிப்பது, விளைநிலங்களை பாழ்படுத்துவது உள்ளிட்ட கொடிய செயல்களில் ஈடுபடுகின்றனர்.

ஏழை மக்களை மிரட்டி ரூ.1 லட்சம் தண்டம் செலுத்த வேண்டும் என்று அச்சுறுத்தும் வனத்துறையினர், ஒரு லட்சத்தை வாங்கி, அதில் ரூ.10 ஆயிரத்துக்கு மட்டும் சான்று கொடுத்து விட்டு, மீதமுள்ள பணத்தை அவர்களே வைத்துக் கொள்வார்கள். அதை எதிர்த்துக் கேட்கும் மக்களை அடித்து, உதைப்பார்கள். வனத்துறையினரின் மனித உரிமை மீறல்களால் தருமபுரி மாவட்டத்தில், குறிப்பாக பென்னாகரம் பகுதியில் ஏராளமான ஏழை மக்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

அத்துமீறல்களின் அடுத்தக்கட்டமாக, வனப்பகுதிகளில் வாழ்வாதாரம் ஈட்டும் மக்களை அங்கிருந்து அகற்ற வனத்துறை முடிவு செய்திருக்கிறது. அதற்காக காவல்துறையினருடன் இணைந்து நாளை சிறப்பு வேட்டை நடத்தவிருப்பதாக தெரியவந்துள்ளது. இது ஏற்றுக்கொள்ளவே முடியாத வாழ்வாதாரப் பறிப்பு ஆகும். வனத்துறையினரின் இத்தகைய அத்துமீறலை தமிழக அரசு அனுமதிக்கவே கூடாது.

தருமபுரி மாவட்டத்தில் உள்ள வனப்பகுதிகளில் தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து வரும் மக்களுக்கு கடந்த காலங்களில் எந்த நெருக்கடியும் ஏற்பட்டதில்லை. தருமபுரி மாவட்டத்தின் புதிய வனத்துறை அதிகாரி பொறுப்பேற்ற பிறகு தான் அத்துமீறல்கள் கட்டவிழ்த்துவிடப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. மாவட்ட வனத்துறை அதிகாரியில் செயல்பாடுகள் மனித உரிமைகளை மீறும் செயல்; காடுகளில் வாழ்பவர்களின் வாழ்வாதாரத்தை பறிக்கும் செயல் என்பதை வனத்துறை பணியாளர்களே ஒப்புக்கொள்கின்றனர். மாவட்ட வனத்த்துறை அதிகாரியின் அத்துமீறலை அரசு அனுமதிக்கக்கூடாது.

தருமபுரி மாவட்டத்தில் அண்மைக்காலங்களில் மட்டும் மின்சாரம் தாக்கி 6 யானைகள் உயிரிழந்துள்ளன. காடுகளுக்குள் யானைகளுக்கு குடிநீர் கிடைக்காததால், குடிநீர் தேடி அவை மக்கள் வாழும் பகுதிகளில் நுழைகின்றன. யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகளின் தேவைகளை நிறைவேற்றி, அவற்றை பாதுகாக்க வேண்டிய வனத்துறை, அப்பாவி மக்களிடம் அத்துமீறுவதை ஏற்றுக்கொள்ளவே முடியாது.

வனத்தை நம்பி வாழும் மக்களின் வாழ்வாதாரம் தொடர்பான இந்த விவகாரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உடனடியாக தலையிட்டு தீர்வு காண வேண்டும். பென்னாகரம் தொகுதியில் வனப்பகுதிகளில் வாழும் மக்களை அங்கிருந்து வெளியேற்றும் நடவடிக்கையை கைவிடும்படி வனத் துறை அதிகாரிகளுக்கு ஆணையிட வேண்டும்; வனப்பகுதிகளில் வாழும் மக்களிடம் எந்த வகையிலும் அத்துமீறக்கூடாது என்று அலுவலர்களுக்கு முதல்வர் ஆணையிட வேண்டும் என வலியுறுத்துகிறேன்.” இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.