யாழ் மாவட்டத்தில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்துவருவதாக யாழ் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவ கலாநிதி ஆறுமுகம் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
மலேரியா பரவும் வாய்ப்புள்ள நாடுகளுக்கு சென்று வருபவர்கள் சுகாதார மற்றும் மலேரியா தடுப்பு ஆலோசனைகளை பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.
டெங்கு மற்றும் மலேரியா நோய் தொடர்பாக நேற்றைய தினம் (02) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இந்த வருடத்தில் மட்டும் சுமார் 1132 டெங்கு நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.டெங்கு நோயால் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
டெங்கு நோய் வருவதற்கு முன்னர் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மக்களை கேட்டுக்கொள்கிறோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, மலேரியா பரம்பல் உள்ள நாடுகளுக்கு சென்று வரக்கூடியவர்களுக்கான சுகாதார மற்றும் மலேரியா தடுப்பு ஆலோசனைகளையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் மலேரியா நோயின் உள்ளூர் தொற்று இறுதியாக 2012 ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்டது. அதன் பின்னர் இதுவரை உள்ளூர் பரம்பல் காரணமாக எந்தவொரு நோயாளியும் இனங்காணப்படவில்லை. ஆனாலும் மலேரியா பரம்பல் உள்ள நாடுகளுக்கு சென்று இலங்கைக்கு திரும்பி வந்தவர்களில் பலருக்கு மலேரியா நோய் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பாட்டார்.