2023 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்ட டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் அல்ட்ராஸ் iCNG காரில் இடம்பெற உள்ள என்ஜின், சிறப்பம்சங்கள், மைலேஜ் உட்பட அனைத்து முக்கிய விபரங்களையும் அறிந்து கொள்ளலாம்.
இந்திய சந்தையில் விற்பனையில் உள்ள ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ், மாருதி பலேனோ மற்றும் கிளான்ஸா சிஎன்ஜி மாடல்களுக்கு போட்டியாளராக அமைந்துள்ள அல்ட்ராஸ் டாடா நிறுவனத்தின் டியாகோ, டிகோர் ஆகிய மாடல்களை தொடர்ந்து அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு பெற்ற மூன்றாவது மாடலாகும்.
2023 Tata Altroz CNG
அல்ட்ராஸ் காரில் 1.2-லிட்டர், மூன்று சிலிண்டர் என்ஜின் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டு 86hp மற்றும் 113Nm டார்க் வெளியிடுகிறது. அதுவே CNG எரிபொருள் பெற்ற மாடல் 77hp மற்றும் 97Nm டார்க் வெளிப்படுத்தும். இதில் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. அல்ட்ராஸ் சிஎன்ஜி எரிபொருள் மைலேஜ் 27Km/kg ஆகும்.
இரட்டை சிலிண்டர் தொழில்நுட்பம் கொண்ட 60 லிட்டர் (ஒவ்வொரு சிலிண்டருக்கும் 30லி) மொத்த சிஎன்ஜி கொள்ளளவை கொண்டுள்ளது. மேலும் இந்த சிலிண்டர் பெரிய பூட் இடத்தை உறுதி செய்வதற்காக லக்கேஜ் பகுதிக்கு கீழே உள்ளது.
மேலும் இந்த காரில் ட்யூப்லெஸ் டயர் கொடுக்கப்பட்டுள்ளதால், புதிய விதிகளின் படி ஸ்டெப்னி டயர் எதுவும் வழங்கப்படாது. ஆனால் அதற்கு பதிலாக, காற்று பம்ப் உடன் டீயூப்லெஸ் பஞ்சர் ரிப்பேர் கிட் உள்ளது. எனவே, பூட் ஸ்பேஸ் 210 லிட்டர் வழங்கப்பட்டுள்ளது.
அல்ட்ராஸின் பரிமாணங்கள், 3,990 mm நீளம், 1,755mm அகலம் மற்றும் 1,523mm உயரம் பெற்று 2,501 mm வீல்பேஸ் உடன் 16 அங்குல டூயல் டோன் வீல் பெற்றுள்ளது.
மொத்தமாக 6 வேரியண்டுகளை பெறுகின்ற அல்ட்ராஸ் காரில் XE, XM+, XM+ (S), XZ, XZ+ (S) மற்றும் XZ+ O (S). வாய்ஸ் அசிஸ்ட் மற்றும் சன்ரூஃப் வசதிகளை XM+ (S), XZ+ (S) மற்றும் XZ+ O (S) வேரியண்டுகள் பெறுகின்றது.
டாப் வேரியண்டில் 7.0-இன்ச் தொடுதிரை, டிஜிட்டல் டிஸ்ப்ளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே வசதியுடன், சன்ரூஃப், 16-இன்ச் அலாய் வீல். , இன்ஜின் ஸ்டார்ட்/ஸ்டாப் பட்டன், ஆட்டோமேட்டிக் ஏசி கட்டுப்பாடு, உயரத்தை சரிசெய்யக்கூடிய ஓட்டுநர் இருக்கை, லெதரெட் இருக்கை, பின்புற ஏசி வென்ட் ஆகியவற்றை கொண்டுள்ளது.
முன்பதிவு தொகை ரூ.21,000 கட்டணமாக வசூலிக்கப்படும் நிலையில் மே மாத இறுதியில் டெலிவரியை துவங்கவுள்ளது. காரின் விலை பெட்ரோல் மாடலை விட ரூ.90,000 முதல் 1,00,000 வரை கூடுதலாக இருக்கலாம்.