சென்னை: “டாஸ்மாக் மூலம் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு அரசை நடத்த வேண்டிய அவசியம் இல்லை” என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.
சென்னை திருமங்கலத்தில் உள்ள வி.ஆர்.மாலில் உள்ள டாஸ்மாக் கடையில் வைக்கப்பட்டுள்ள தானியங்கி மது விற்பனை இயந்திரத்தை அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று ஆய்வு செய்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “திமுக ஆட்சி அமைந்த இரண்டு ஆண்டு காலத்தில் இதுவரை 96 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. ஆனால், சில பத்திரிகைகள், தமிழக அரசு டாஸ்மாக் மூலம் வரும் வருமானத்தால் செயல்படுவது போல் செய்தி வெளியிடுவது வேதனை அளிக்கிறது.
இந்த மாலில் உள்ள கடையை பொறுத்தவரையில் பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரைதான் செயல்படுகிறது. டாஸ்மாக் கடையும் அந்த நேரத்தில் மட்டும்தான் இயங்கும். இதனை 24 மணி நேரம் பயன்படுத்தலாம், கடைக்கு வெளியே உள்ளது. ATM-ஐ உடைத்து எடுப்பது போல் இதனை உடைத்து எடுத்துக் கொள்ளலாம் என்று எல்லாம் தவறான செய்தியைப் பரப்புகின்றனர்.
இந்தக் கடைக்குள் தானியங்கி இயந்திரம் பொருத்தப்பட்டுள்ளதா அல்லது வெளியேவா, 24 மணி நேரமும் எடுக்க முடியுமா என்று தெரிந்து செய்தி வெளியிடுங்கள். 21 வயதுக்கு குறைவுடைய யாராவது இதில் மது வாங்க முடிகிற அளவுக்கு உள்ளதா? இரண்டு ஊழியர்கள் கண்காணிப்பில்தான் கடை இயங்குகிறது. இந்தக் கடை எங்கு உள்ளது, எப்படி செயல்படுகிறது என்று தெரிந்து செய்தி வெளியிடுங்கள்.
29% நாடாளுமன்ற வருகை பதிவு கொண்ட நாடாளுமன்றத்திற்கே போகாதவர் இது குறித்து செய்தி வெளியிடுகிறார். 2019-இல் தான் இந்த தானியங்கி இயந்திரம் திறக்கப்பட்டது. 2013, 2014, 2018 என நான்கு ஆண்டுகளில் நான்கு கடைகளில் அதிமுக ஆட்சியில் தான் திறக்கப்பட்டது. டாஸ்மாக் நிறுவனம், இந்த தானியங்கி இயந்திரத்திற்கு ஒரு ரூபாய் கூட செலவு செய்யவில்லை. உள் கட்டமைப்பு வசதிகளை மது நிறுவனங்கள் செய்கின்றன. அதைக் கடைகளில் பயன்படுத்துகிறார்கள்.
எதிர்க்கட்சித் தலைவர் , அன்புமணி உட்பட யாராவது நாடாளுமன்றத்தில் பேசி, இந்தியா முழுவதும் பூரண மது விலக்கு கொள்கையை கொண்டு வர வேண்டியதுதானே. அதற்கு தைரியமில்லை, இங்கு வந்து அரசியல் செய்கிறார்கள். சட்டப்பேரவையில் சில்லறை விற்பனை நடைபெறும் 500 கடைகள் மூடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. டாஸ்மாக் மூலம் கிடைக்கும் இந்த வருமானத்தை கொண்டு அரசு நடத்த வேண்டிய அவசியம் திமுக அரசுக்கு இல்லை .
கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்த 1977 பேர் நடவடிக்கை எடுக்கப்பட்டு ஐந்தரை கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. சமூக வலைதளங்களில் வெளியிடப்படும் செய்திகளை கொண்டு உண்மைத் தன்மையை ஆராயாமல் செய்தி வெளியிட வேண்டாம். டாஸ்மாக் நிறுவனம் மூலம் வரும் வருமானத்தை வைத்து அரசை நடத்துவது போன்று சித்தரித்து செய்தி வெளியிடும் பத்திரிகை, தொலைக்காட்சி, செய்தி நிறுவனம் சமூக வலைத்தளம் என யாராக இருந்தாலும் சட்டபடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்று அமைச்சர் கூறினார்.