‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் வரும் 5-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழக அரசுக்கு உளவுத் துறை ஓர் எச்சரிக்கையை விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தை தமிழகத்தில் வெளியிட்டால், அது பரவலான போராட்டத்துக்கு வழிவகுக்கும் என்று அரசுக்கு தமிழக உளவுத் துறை எச்சரித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
விபுல் ஷா தயாரிப்பில் இயக்குநர் சுதிப்டோ சென் இயக்கத்தில் உருவாகி உள்ள ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்தின் முன்னோட்டம் அண்மையில் வெளியானது. இந்ததிரைப்படத்தில் அடா சர்மா, சித்னி இட்னானி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
கேரளாவைச் சேர்ந்த 4 பெண்கள் கல்லூரி விடுதியில் ஒரே அறையில் தங்குகின்றனர். அவர்களில் ஒருவர் முஸ்லிம் பெண். மற்றவர்கள் மூளைச் சலவை செய்யப்பட்டு முஸ்லிமாக மதமாற்றம் செய்யப்படுவதாகவும், ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்புக்காக சிரியா போன்ற நாடுகளுக்கு கடத்தப்படுவதாகவும் முன்னோட்டத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. கேரளாவைச் சேர்ந்த 32,000 பெண்கள் மதமாற்றம் செய்யப்பட்டு ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேர்க்கப்பட்டனர் என்றும் முன்னோட்டத்தில் கூறப்பட்டிருக்கிறது.
இந்தப் படம் இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளத்தில் மே 5-ம் தேதி வெளியாகிறது. இதற்கு கேரளா மட்டுமின்றி நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கடுமையான எதிர்ப்பு எழுந்திருக்கிறது. இந்த படத்திற்கு மத்திய தணிக்கை வாரியம் ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. இந்நிலையில் இந்தப் படத்தை தமிழகத்தில் வெளியிட்டால் அது பரவலான போராட்டத்துக்கு வழிவகுக்கும் என்று தமிழக அரசுக்கு உளவுத் துறை எச்சரித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ‘தி கேரளா ஸ்டோரி’ படத்தை வெளியிட தடை செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றமும் தள்ளுபடி செய்துவிட்டது. இந்நிலையில், தமிழக அரசுக்கு உளவுத் துறை விடுத்துள்ள எச்சரிக்கை கவனம் பெறுகிறது.
சசி தரூர் கண்டனம்: கேரள மாநிலம் திருவனந்தபுரம் தொகுதி எம்.பி.யான சசி தரூர், தி கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் “இது உங்கள் ஸ்டோரியாக இருக்கலாம் ஆனால் நிச்சயமாக எங்கள் மாநில ஸ்டோரி இல்லை” என்று படக்குழுவுக்கு தெரிவித்திருந்தார். இந்நிலையில் மீண்டும் அவர் ஒரு ட்வீட்டைப் பதிவு செய்துள்ளார்.
அதில், “நான் மீண்டும் ஒன்றை வலியுறுத்திச் சொல்ல விரும்புகிறேன். நான் படத்திற்கு தடை கோரவில்லை. கருத்து சுதந்திரம் என்பதை துஷ்பிரயோகம் செய்வதால் அது மதிப்பற்றதாகிவிடாது. ஆனால் கேரள மக்களுக்கு நீங்கள் கூறும் கருத்துக்கு உண்மைக்குப் புறம்பானது என்பதை உரக்கச் சொல்ல எல்லா உரிமையும் இருக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.