கூடலூர்
கூடலூரில் 2 நாட்கள் நடந்த மாநில அளவிலான கைப்பந்து போட்டிகளில் சென்னை அணி சாம்பியன் பட்டத்தை பெற்றது.
கைப்பந்து போட்டிகள்
கூடலூர் ரெட் லயன்ஸ் கைப்பந்தாட்ட கிளப் சார்பில் மாவட்ட, மாநில அளவிலான கைப்பந்து போட்டிகள் கூடலூர் துப்புக்குட்டிபேட்டையில் 2 நாட்கள் நடைபெற்றது. முதல் நாளில் நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த ஆடவர், மகளிர் கொண்ட 14 அணிகள் கலந்து கொண்டு விளையாடியது.
மகளிருக்கான கைப்பந்தாட்ட இறுதிப் போட்டியில் கோத்தகிரி மற்றும் கூடலூர் அணி விளையாடியது. இதில் கோத்தகிரி அணி வெற்றி பெற்றது. தொடர்ந்து மாநில அளவில் மகளிருக்கான கைப்பந்தாட்ட போட்டியில் 7 அணி மோதியது. இறுதிப்போட்டியில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு அணி (சென்னை) யும், தமிழ்நாடு தபால் துறை அணியும் மோதியது. இதில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு அணி (சென்னை) வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றது.
சென்னை அணிகள் சாம்பியன்
இதேபோல் ஆடவர் பிரிவில் மாநில அளவில் நடைபெற்ற கைப்பந்தாட்ட போட்டியில் சென்னை டேஞ்சர் பாய்ஸ் அணியும், கர்நாடகா அணியும் மோதியது. இதில் சென்னை அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை அடைந்தது. இதைத்தொடர்ந்து வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
மாவட்ட அளவில் நடந்த மகளிர் கைப்பந்தாட்ட போட்டியில் வெற்றி பெற்ற கோத்தகிரி அணிக்கு ரூ.10 ஆயிரமும், கூடலூர் அணிக்கு ரூ.7 ஆயிரமும் வழங்கப்பட்டது. இதேபோல் மாநில அளவிலான மகளிர் கைப்பந்தாட்ட போட்டியில் வெற்றி பெற்ற சென்னை அணிக்கு ரூ.25 ஆயிரமும், 2-வது இடத்தை பிடித்த தமிழ்நாடு தபால் துறை அணிக்கு ரூ.15 ஆயிரமும் வழங்கப்பட்டது.
தொடர்ந்து ஆடவர் பிரிவில் மாநில அளவில் நடந்த கைப்பந்தாட்ட போட்டியில் வெற்றி பெற்ற டேஞ்சர் பாய்ஸ் சென்னை அணிக்கு ரூ.60 ஆயிரமும், 2-வது இடத்தை பிடித்த கர்நாடக அணிக்கு ரூ.40 ஆயிரமும் வழங்கப்பட்டது.