சென்னை: தற்போதைய அரசியல் சூழ்நிலைகளில் பதவி , பணம் ஆகிய மாய வலைக்குள் சிக்குண்டு இருக்கும் நமது கழகத்தை மீட்டெடுக்க வேண்டும் என்று தமிழக முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வத்தின் இளைய மகன் ஜெயபிரதீப் என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
தமிழக முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் தலைமையிலான அணிக்கு அதிமுகவின் இரட்டை இலை சின்னம் கிடைக்கவில்லை. மாறாக எடப்பாடி பழனிசாமி அணிக்கே தேர்தல் ஆணையம் கட்சி மற்றும் சின்னத்தை பயன்படுத்த அனுமதி அளித்தது. இது ஓ பன்னீர்செல்வம் தரப்புக்கு மிக பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இதனால் ஓபிஎஸ் தரப்பு கடும் அப்செட்டில் இருக்கிறது.
அண்மையில் அறிக்கை வெளியிட்ட ஓபிஎஸ் தற்போது உள்ள பொதுக்குழுவை கலைப்படுவதாகவும், புதிய பொதுக்குழு விரைவில் தேர்வு செய்யப்படவதாகவும் கூறியிருந்தார்,
இந்நிலையில் ஓபிஎஸ் மகன் ஜெயபிரதீப் இன்று வெளியிட்டுள்ள ட்வீட் பதிவில், “தற்போதைய அரசியல் சூழ்நிலைகளில் பதவி , பணம் ஆகிய மாய வலைக்குள் சிக்குண்டு இருக்கும் நமது கழகத்தை மீட்டெடுக்க வேண்டும்.
நமது இரு பெரும் தலைவர்களின் கொள்கைகளையும் சட்ட திட்டங்களையும் கடைப்பிடித்து அவர்களது கனவுகளை உயிர்ப்பிக்கும் வகையிலும் கழக ஒருங்கிணைப்பாளர் மற்றும் முக்கிய தலைவர்களின் கட்டளையை செயல்படுத்தும் விதமாக மட்டும் பதிவுகள் வரவேண்டும் என்று விரும்புகிறேன்.
மக்கள் வளர்ச்சி பணிகள், தொண்டர்களை ஊக்குவிக்கும் பணிகள் ,கழக நிர்வாகிகளின் உத்தரவை நிறைவேற்றும் வகையிலும் நாம் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
ஒவ்வொரு ஊருக்கும் ஒரு தலைவன் உருவாக வேண்டும். மீண்டும் நமது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் மிகப்பெரிய வளர்ச்சி பெற்று தமிழகத்தை மிகச் சிறப்பாக ஆட்சி செய்ய வேண்டும் என்பதே நமது லட்சியம். அதை நோக்கியே நமது பயணங்கள் மேற்கொள்ள வேண்டும் அதில் உங்களில் ஒருவனாக நானும் பயணிப்பேன் என்பதை அன்புடன் தெரிவித்து கொள்கிறேன்.” என்று கூறியுள்ளார்.