கும்பகோணம்: கும்பகோணத்தில் மர்ம நோயால் நாய்கள் பாதிப்பு ஏற்பட்டு வரும் நிலையில், மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
கும்பகோணம் வட்டம், மேலக்காவேரி பகுதிகளில் அண்மைக் காலமாக பல நாய்கள் மர்ம நோயால் பாதிக்கப்பட்டுள்ளது. அந்த நாய்களின் மேல் தோல்கள் உரிந்தும், முடிகள் கொட்டியும், உடல்களில் பல்வேறு இடங்களில் துளையிட்டு காணப்படுகிறது. அந்த நாய்கள் சாலையில் செல்லும் போது துர்நாற்றம் வீசுவதால், பொது மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
இந்நோயால் பாதிக்கப்பட்ட நாய்கள் மற்ற நாய்களைக் கடிக்கும் போதோ, அருகில் செல்லும் போதோ, அந்த நாய்களுக்கும் இது போன்ற மர்ம நோய்கள் தாக்கப்படுவதால், அப்பகுதியில் நாளுக்கு நாள் இந்த நோயால் பாதிக்கப்பட்ட நாய்கள் பெருகி வருகிறது. மேலும் சில நாய்கள் உடல்கள் தளர்ந்து, உணவு உண்ண முடியாமல் படும் அவஸ்தைகளை பார்ப்பதற்கே பரிதாப நிலை ஏற்படுகிறது.
மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள வணிகப்பகுதிகள், பள்ளிக்கூடங்கள் உள்ளிட்ட பகுதிகளில் நாய்கள் திரிவதால், அங்குள்ளவர்கள் அச்சத்துடன் உள்ளனர். இதே நிலை நீடித்தால், பொது மக்களுக்கும் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம் உடனடியாக மர்ம நோயால் பாதிக்கப்பட்டுத் திரியும் நாய்களைப் பிடிக்க வேண்டும், இந்நோய்க்கான காரணங்களைக் கண்டறிந்து, மற்ற நாய்களுக்கு ஏற்படாதவாறு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் மு.அயூப்கான் மற்றும் பலர் வலியுறுத்தியுள்ளனர்