ஜி ஸ்கொயர் நிறுவனத்திடம் இருந்து 3.5 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியான நிலையில், அது குறித்து அந்நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
G Square நிறுவனங்களில் ஐ.டி. ரெய்டு!
இது குறித்து ஜி ஸ்கொயர் நிறுவன இயக்குநர் ராம ஜெயம் என்கிற பாலா வெளியிட்ட அறிக்கையில், ‘‘ரியல் எஸ்டேட் துறையில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான எங்களின் ஜி ஸ்கொயர் ரியல்டார்ஸ் நிறுவனத்தில் நடைபெற்ற வருமான வரி சோதனை குறித்து பொதுமக்களுக்கு விளக்கம் அளிக்க விரும்புகிறோம். நாடு முழுவதும் உள்ள எங்கள் நிறுவனத்தில் நடத்தப்பட்ட இந்த சோதனையின் காரணமாக எழுந்த பல்வேறு தேவையற்ற சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் எங்களின் உண்மை நிலைப்பாட்டை மக்களுக்கு விளக்குவதற்காகவும் இந்த செய்திக்குறிப்பு.
நிர்வாகத்தின் வரவு செலவு கணக்குகள் குறித்து விளக்கம் பெறும் விதமாக வருமான வரித்துறையினர் நடத்தும் இது போன்ற சோதனைகள் வழக்கமான ஒன்று தான். அதுபோல தான் எங்கள் நிறுவனத்திலும் இந்த சோதனை இயல்பான் ஒன்றே. எங்களை போன்று நாடு முழுவதும் இருக்கும் பல ரியல் எஸ்டேட் நிறுவனங்களில், சட்டத்திற்கு உட்பட்டு நிலங்கள் விற்கப்படுகிறதா, வருமான வரி முறையாக செலுத்தப்படுகின்றதா என்பதை கண்காணிக்க இது மாதிரியான சோதனைகள் அவ்வப்போது நடத்தப்பெறும்.
கடந்த சில மாதங்களாக நாடு முழுவதும் பல்வேறு ரியல் எஸ்டேட் நிறுவனங்களில் இது போன்ற சோதனைகள் நடைபெற்று இருக்கிறது. அந்த வகையில், கடந்த ஒரு வார காலமாக எங்கள் நிறுவனத்தில் நடைபெற்ற வருமானவரி சோதனையின் போது, அதிகாரிகளுக்கு எங்களின் முழு ஒத்துழைப்பை அளித்துள்ளோம். வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு தேவையான ஆவணங்கள், எங்கள் நிறுவனம் இதுவரை விற்ற நிலங்கள், தற்போது விற்பதற்காக வைத்திரும் நிலங்கள், அதற்கான நிதி ஆதாரம் (எங்களின் இணையதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளவை) போன்ற அனைத்தையும் தயங்காமல் சமர்பித்திருக்கிறோம்.
எங்கள் நிறுவனத்தின் நிதி பரிவர்த்தனைகள், வருமான வரி விதிகளுக்கும், இந்தியாவின் பொருளாதார சட்டங்களுக்கும் உட்பட்டே செயல்படுத்தப்படுகிறது என்பதை உறுதியாக மீண்டும் ஒருமுறை தெரிவித்துக் கொள்கிறோம். இந்நிலையில் ஆதராமில்லாமல் சில தனி நபர்கள் பரப்பி வரும் பொய் குற்றச்சாட்டுகளை எங்கள் ஜி ஸ்கொயர் நிறுவனம் திட்டவட்டமாக மறுக்கிறது. வணிக நடைமுறைகளில், மிக உயர்ந்த நெறிமுறை மற்றும் தரநிலைகளை கொண்டு செயல்படும் எங்கள் நிறுவனம், இச்சோதனை காலம் முழுவதும் வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு போதுமான ஒத்துழைப்பு வழங்கி, இணக்கத்துடன் நடந்து கொண்டது என்பதை கண்ணியத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
வருமான வரித்துறை நடத்திய இந்த விரிவான விசாரணைகள் மூலம், எங்கள் நிறுவனத்திற்கும், எந்த அரசியல் கட்சிக்கோ அல்லது அவர்களின் குடும்பத்தனிருக்கோ எந்தவித தொடர்பும் இல்லை என்பது தெள்ளத் தெளிவாக சந்தேகத்திற்கு இடமின்றி உறுதியாகியுள்ளது. இதற்காக வருமான வரித்துறையினருக்கு நாங்கள் மிகவும் கடமைப்பட்டுள்ளோம். ஏனென்றால் இந்த சோதனையினால் தான் ஜி ஸ்கொயர் நிறுவனத்தின் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளும் பொய்யானது மட்டுமல்லாமல் ரூ.38,000 கோடி ரூபாய் சொத்து மதிப்பு இருப்பதாக வெளியான ஆதாரமற்ற கூற்றும் நிரூபிக்கப்பட்டு இன்று உண்மை உறுதியாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது.
அதேவேலையில் சில செய்தி சேனல்கள் மற்றும் தனி நபர்கள் சிலர் எங்கள் நிர்வாகத்தில் நடத்தப்பட்ட வருமான வரித்துறையின் சோதனை குறித்து வெளியிட்ட பொய்யான தகவல்கள் ஏற்புடையதல்ல. குறிப்பாக இந்த வருமான வரி சோதனையின்போது எங்களிடமிருந்து ரூ.3.5 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்பட்ட குற்றச்சாட்டை நாங்கள் முற்றிலும் மறுக்கிறோம். இதுபோன்ற ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளும், தவறான வழிநடத்தலும், எங்கள் நிறுவனத்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கம் கொண்டது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.
சில சமூக ஊடகங்களில் வெளியான பதிவுகள் ஒரு குறிப்பிட்ட பட்டயக் கணக்காளரை ஜி ஸ்கொயர் நிறுவனத்துடன் தொடர்பு படுத்தியிருப்பது எங்களுக்குத் தெரிய வந்தது. இது முற்றிலும் தவறானது. எங்கள் ஜி.ஸ்கொயர் நிறுவனத்திற்கு ஜி.ஷங்கர் அசோசியேட்ஸ் மற்றும் ஏவிஎஸ் அசோசியேட்ஸ் ஆகியவைகள் தான் தணிக்கை நிறுவனங்களாக செயல்படுகின்றன. சமீபத்தில் நடத்தப்பட்ட சோதனையின் போது எங்கள் நிறுவனங்களில் இருந்து பணம் ஏதும் கைப்பற்றப்படவில்லை என்பதுதான் உண்மை’’ என தெரிவித்துள்ளது.