சென்னை:
வங்கக்கடலில் உருவாகவுள்ள புதிய புயலுக்கு மோக்கா எனப் பெயரிடப்பட்டிருக்கிறது. நடப்பாண்டில் இந்தியாவில் உருவாக போகும் புதிய புயல் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. மோக்கா புயல் எங்கு தாக்கும்.. எப்போது தாக்கும்.. அதன் பாதிப்பு எப்படி இருக்கும் என்பது குறித்து இங்கு பார்க்கலாம்.
தமிழகத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. பற்றாக்குறைக்கு, நாளை வேறு அக்னி நட்சத்திரம் ஆரம்பிக்கப் போவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது ஒருபுறம் இருக்க, வெயிலுக்கு ஐஸ்கிரீம் சாப்பிட்டதை போல கடந்த இரண்டு தினங்களாக தமிழகத்தில் பல மாவட்டங்களில் ஜில்லென கோடை மழை பெய்து பூமியை குளிர்வித்துள்ளது. இந்த சூழலில், வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மையம் உருவாகி வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. மேலும், இது புயலாக மாறுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
சரியாக, தென்கிழக்கு வங்கக்கடலில் மையம் கொண்டிருக்கும் இந்தக் காற்று சுழற்சி, வரும் 6 அல்லது 7-ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு மையமாக உருவாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர், மே 10 அல்லது 11-ம் தேதி இது புயலாக மாறக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இப்போதை சூழலில், இது ஒடிசாவை நோக்கி நகரக்கூடும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. ஆனால், காற்றின் வேகத்தை பொறுத்து இதன் திசை மாறக்கூடும். தமிழகத்திலும் இது பாதிப்பை ஏற்படுத்தலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அப்படி இந்த புயல் உருவாகும்பட்சத்தில் அதற்கு மோக்கா எனப் பெயரிடப்படும். இந்த பெயரை யேமன் நாடு சூட்டி இருக்கிறது.
இதனால் வரும் 7-ம் தேதி முதல் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என மீனவர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.