கொடைக்கானல் அருகே காட்டாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் சின்னூர், பெரியூர் மலைக்கிராம மக்கள் கிராமத்தை விட்டு வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் அருவிகளில் நீர் வரத்து ஏற்பட்டுள்ளது. கொடைக்கானல் தாலுகாவைச் சேர்ந்த மலைக்கிராமங்களான சின்னூர் மற்றும் பெரியூரில் சாலை வசதிகள் இல்லை. இவ்விரு மலைக்கிராமங்களில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இக்கிராம மக்கள் அவசரம் மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்காக தேனி பெரியகுளம் அடுத்த சோத்துப்பாறை வழியாக 15 கி.மீ. தொலைவுக்கு மலைச்சாலையில் வனப்பகுதி வழியாக சென்று வரும் நிலை உள்ளது.இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பெய்த கனமழையால் இந்த மலைக்கிராம மக்கள் செல்லும் மலைச்சாலையில் உள்ள கல்லாறு என்ற காட்டாற்றில் திடீர் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனால் கிராம மக்கள் கிராமத்தை விட்டு வெளியேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இம்மலை கிராம மக்கள் மருத்துவ தேவைக்காக சென்று வர முடியாத நிலையில் தவித்து வருகின்றனர். கனமழைக் காரணமாக கிராமத்தில் சில வீடுகளும் சேதமடைந்துள்ளன. உடனடியாக மாவட்ட நிர்வாகம் கிராம மக்களை மீட்டு தேவையான உதவிகளை செய்து கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.