மேகேதாட்டுவில் அணைக் கட்ட ரூ.9 ஆயிரம் கோடி ஒதுக்கீடு; கர்நாடகாவில் இட ஒதுக்கீடு 75 சதவீதமாக உயர்த்தப்படும் – காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் அறிவிப்பு

பெங்களூரு: கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு காங்கிரஸின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே நேற்று பெங்களூருவில் வெளியிட்டார். இதனை க‌ர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார், மூத்த தலைவர்கள் சித்தராமையா, பரமேஷ்வர் உள்ளிட்டோர் பெற்றுக்கொண்டனர்.

அப்போது மல்லிகார்ஜூன கார்கே செய்தியாளர்களிடம் கூறியதாவது: காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் வறுமைக்கோட்டுக்கு கீழே வாழும் அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் மாதம் ரூ.2 ஆயிரம் வழங்கப்படும். அரசு பேருந்தில் மகளிர் இலவசமாக பய‌ணிக்கலாம். வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.3 ஆயிரம், டிப்ளமோ படித்தவர்களுக்கு ரூ. 1500 ஊக்கத் தொகையாக 2 ஆண்டுகளுக்கு வழங்கப்படும். வறுமைகோட்டுக்கு கீழ் வாழும் குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதம் 10 கிலோ அரிசி வழங்கப்படும். ஒவ்வொரு வீட்டுக்கும் மாதம் 200 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்கப்படும்.

பாஜக அரசு அமல்படுத்திய புதிய கல்வி கொள்கை ரத்து செய்யப்படும். சிறுபான்மையினருக்கு எதிராக பாஜக‌ கொண்டுவந்த சட்டங்கள் ரத்து செய்யப்படும். கர்நாடக அமைதியை கெடுக்கும் பஜ்ரங் தளம், பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா (பிஎஃப்ஐ) போன்ற மதம், சாதி சார்ந்த அமைப்புகளுக்கு தடை விதிக்கப்படும்.

உச்சநீதிமன்றம் வரையறுத்துள்ள 50 சதவீத இடஒதுக்கீடு 75 சதவீதமாக உயர்த்தப்படும். சாதி ரீதியாக கணக்கெடுப்பு நடத்தி, சமூக நீதியை நிலைநாட்டும் வகையில் ஒவ்வொரு சாதியினருக்கும் உரிய இட ஒதுக்கீடு வழங்கப்படும். மேகேதாட்டுவில் அணைக் கட்ட ரூ.9 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

இதுதவிர, அனைத்து தேர்தல் வாக்குறுதிகளையும் காங்கிரஸ் ஆட்சி அமைந்த முதல் நாளில் இருந்தே அமல்படுத்தும் பணிகள் தொடங்கப்படும். இவ்வாறு மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.