சென்னை: சீயான் விக்ரம் தற்போது பா ரஞ்சித் இயக்கும் தங்கலான் படத்தில் நடித்து வருகிறார்.
பீரியட் ஜானரில் பிரம்மாண்டமாக உருவாகும் இந்தப் படத்தை ஸ்டுடியோ கிரீன் தயாரித்து வருகிறது.
தங்கலான் திரைப்படத்தை சர்வதேச அளவில் கொண்டு செல்ல பா ரஞ்சித் உட்பட படக்குழு முடிவு செய்திருந்ததாம்.
ஆனால், தற்போது அது முடியாமல் போய்விடுமோ என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
ஆஸ்கருக்கு செல்லும் தங்கலான்: பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்த கரிகாலனாக மிரட்டிய சீயான் விக்ரம், அடுத்து தங்கலான் ஷூட்டிங்கில் கலந்துகொண்டார். முதன்முறையாக விக்ரம் – பா ரஞ்சித் கூட்டணியில் உருவாகும் இந்தப் படம் மீது நாளுக்கு நாள் எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இதுவரை 80 சதவீதம் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக சொல்லப்படுகிறது.
தங்கலான் முந்தைய ஷெட்யூல் கோலாரில் நடைபெற்றது. இதனையடுத்து சென்னையில் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு தொடங்கியது. இதனிடையே தங்கலான் படத்தை ஆஸ்கர் விருது விழா உட்பட 9 சர்வதேச திரையிடல்களுக்கு கொண்டு செல்ல படக்குழு திட்டமிட்டுள்ளதாம். இதற்காக பா ரஞ்சித், தயாரிப்பாளர் ஞானவே ராஜா இப்போதே பக்காவாக பிளான் செய்து வருகின்றனர்.
சமீபத்தில் ராஜமெளலி இயக்கிய ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் ஆஸ்கர் உள்ளிட்ட பல சர்வதேச விருதுகளை வென்றது. இதனால் தங்கலான் படத்தையும் ஆஸ்கர் ரேஸில் களமிறக்க படக்குழு முடிவு செய்துள்ளதாம். சமீபத்தில் விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் கிளிம்ப்ஸ் படு மிரட்டலாக உருவாகியிருந்தது. மேலும், பா ரஞ்சித் உட்பட தங்கலான் குழுவினரும் இந்தப் படம் குறித்து ஹைப்பை ஏற்றி வருகின்றனர்.
அதனால், நிச்சயம் ஆஸ்கர் விழாவில் தங்கலான் மாஸ் காட்டும் என்ற நம்பிக்கையில் பா ரஞ்சித் நினைத்திருந்தார். ஆனால், சென்னையில் இன்று நடைபெற்ற தங்கலான் படப்பிடிப்பில் விக்ரம் கையில் விலா முறிவு ஏற்பட்டுள்ளது. இதனால், விக்ரம் சில தினங்கள் படப்பிடிப்பில் கலந்துகொள்ளாமல் ஓய்வெடுக்க உள்ளதாக அவரது மேனஜர் கூறியுள்ளார்.
விக்ரம் காயம் காரணமாக தங்கலான் படத்தை குறிப்பிட்ட தேதியில் முடிக்க முடியுமா என சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அப்படி தாமதமானால் 2024 ஆஸ்கர் போட்டியில் திரையிட முடிமா என்பது சந்தேகமே. ஆனாலும், இயக்குநர் பா ரஞ்சித்தும் தயாரிப்பாளார் ஞானவேல் ராஜாவும் தங்களது நம்பிக்கையை இழக்காமல் உள்ளனர். எனவே ஆஸ்கர் மேடையில் தங்கலான் குரலும் ஒலிக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.