அமராவதி: தெலுங்கு தேசம் கட்சித்தலைவர் சந்திரபாபு நாயுடு நடிகர் ரஜினிகாந்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, அவரிடம் யார் என்ன கூறினாலும், உங்கள் மீதுள்ள மரியாதை மாறாது என ரஜினி தெரிவித்துள்ளார்.
மறைந்த நடிகர் என்.டி.ராமாராவின் நூற்றாண்டு தொடக்க விழா விஜயவாடாவில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற நடிகர் ரஜினிகாந்த், தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு, என்டிஆரின் மகன் பாலகிருஷ்ணா ஆகியோரை புகழ்ந்து பேசினார். இதனால் ரஜினிகாந்த், ஒய்ஆர்எஸ் காங்கிரஸ் கட்சியினரின் விமர்சனத்துக்கு ஆளானார். இதற்கு சந்திரபாபு நாயுடு கடும் கண்டனம் தெரிவித்தார். எனினும் ரஜினியை விமர்சிப்பதை ஜெகன் கட்சியினர் நிறுத்தவில்லை.
இந்த சூழலில் ரஜினியை சந்திரபாபு நாயுடு நேற்று தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார். அப்போது இந்த விமர்சனங்கள் குறித்து பேச்சு எழுந்தது. விமர்சனங்கள் பற்றி எதுவும் நினைக்க வேண்டாம் என சந்திரபாபு நாயுடு கேட்டுக்கொண்டார். இதற்கு ரஜினி, “அப்படி எதுவும் நான் நினைக்கவில்லை. அதுபற்றி சிந்திக்க கூட இல்லை. ஆனால், யார் என்ன கூறினாலும் உங்கள் மீதுள்ள மரியாதை என்றும் மாறாது” என்று கூறியுள்ளார்.