கடந்த ஆண்டு அரகலய போராட்டத்தின் போது ஊடகங்கள் ஆற்றிய பங்கு குறித்து அரசாங்கம் கேள்வி எழுப்பியுள்ளது.
கடந்த ஆண்டு மே மாதம் அரசியல்வாதிகளின் சொத்துக்கள் தாக்கப்பட்டு நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரும் கொல்லப்பட்ட போது ஊடகங்கள் ஆற்றிய பங்கு தொடர்பில் தனக்கு கேள்விகள் இருப்பதாக ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் நேற்று (03.05.2023) கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே குணவர்தன மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இலங்கையில் ஊடக சுதந்திரம்
இலங்கையில் ஊடக சுதந்திரத்தை பாதுகாக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
தமக்கு எதிராக செய்தி வெளியிடுவதற்கு கூட ஜனாதிபதி ஊடகங்களுக்கு அனுமதி வழங்கியுள்ளார்.
எவ்வாறாயினும், 2022 மே 9 ஆம் திகதி ஆர்ப்பாட்டக்காரர்கள் சொத்துக்களைத் தாக்கியபோதும், அரசியல்வாதி ஒருவரைக் கொன்றபோதும், நாடாளுமன்ற கட்டிடத்தை முற்றுகையிட முயன்றபோதும் ஊடகங்களின் பங்கு குறித்து கேள்விகள் உள்ளன என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்ததாவது,
‘‘இன்று, மே 3, உலக பத்திரிகை சுதந்திர தினம், இது பத்திரிகை சுதந்திரத்தின் முக்கியத்துவத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், 1948 உலகளாவிய பிரகடனத்தின் 19 வது பிரிவின் கீழ் பொதிக்கப்பட்ட கருத்துச் சுதந்திரத்திற்கான உரிமையை மதிக்கவும், நிலைநிறுத்தவும் அரசாங்கங்களின் கடமையை நினைவூட்டவும் அனுசரிக்கப்படுகிறது” என தெரிவித்துள்ளார்.