தமிழ்நாடு சாம்பியன்ஸ் ஃபவுன்டேசன்: அமைச்சர் உதயநிதி நடத்திய கலந்துரையாடல்!

அமைச்சர்

நேற்று (03.05.2023) சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள ஹயாத் ரெசிடன்சியில் தமிழ்நாடு சாம்பியன்ஸ் ஃபவுன்டேசன் (TN Champions Foundation) தொடர்பாக தொழில் நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், தேசிய மற்றும் தனியார் வங்கிகள், மத்திய, மாநில பொது நிறுவனங்கள் மற்றும் மருத்துவ நிறுவனங்களைச் சார்ந்த பிரதிநிதிகளுடன் கலந்துரையாடினார். இந்த நிகழ்ச்சியில் ஏறத்தாழ 170-க்கு அதிகமான தொழில் நிறுவனத்தினர் மற்றும் வங்கியாளர்கள் கலந்து கொண்டனர்.

இந்த பிரதிநிதிகளுடன் கலந்துரையாடிய பின் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியபோது, “விளையாட்டு நம் வாழ்வில் முக்கிய பங்கு வகிக்கிறது, நமது உடல் மற்றும் மன ரீதியாக பல நன்மைகளை ஏற்படுத்துகின்ற விளையாட்டு நமது சமூகத்தின் ஒற்றுமையை ஊக்குவிக்கிறது.

தமிழ்நாட்டில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை சார்பில் பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு தமிழ்நாட்டை விளையாட்டின் தலைநகராக மாற்ற வேண்டும் என்ற லட்சியத்தோடு புதிய திட்டங்களை தொடங்கவும், விளையாட்டு வீரர்கள் வீராங்கனைகளை ஊக்குவிக்கவும் தமிழ்நாடு சாம்பியன்ஸ் பவுண்டேஷன் எனும் அறக்கட்டளையை தொடங்கியுள்ளோம். விளையாட்டுத்துறை சிறப்பாக இயங்க அதற்கு நிதி ஆதாரம் என்பது மிக மிக அவசியமான ஒன்று. எனவே, தமிழ்நாடு சாம்பியன்ஸ் பவுண்டேசன் மூலம் விளையாட்டு வீரர்கள் வீராங்கனைகளுக்கு உதவ முடிவு செய்து தொடங்கவுள்ளோம்.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாடு சாம்பியன்ஸ் பவுண்டேசன்-யை வருகிற 08.05.2023 அன்று சென்னையில் தொடங்கி வைக்கிறார். இந்த குறிப்பிடத்தக்க தமிழ்நாடு அரசின் முன் முயற்சிக்கு உங்கள் அனைவரின் ஆதரவையும் கோருகிறேன். மக்கள் வளர்ச்சிக்கு அரசின் ஆதரவு மிக முக்கியமானது. விளையாட்டு வளர்ச்சியினை உருவாக்கிட நியாயமான கிராமப்புற விளையாட்டு திறமைகளை கண்டறியும் வகையில் விளிம்பு நிலை இளைஞர்கள், எங்களிடம் உள்ளனர்.

தமிழ்நாட்டில் விளையாட்டுத் திறனை மேம்படுத்த தமிழ்நாடு தொழில் துறையினர் உரிய பங்களிப்பை அளித்திட இதுவே சரியான தருணம். சி.எஸ்.ஆர் (CSR) நிதி மூலம் பல விளையாட்டு வீரர்களுக்கு பல வழிகளில் நிதி உதவி செய்து நிறுவனங்கள் பங்களிக்க முடியும்.

தமிழ்நாடு பட்ஜெட் 2023-2024 தமிழ்நாட்டின் விளையாட்டுக்கான ஒரு முக்கியமான தருணமாகும். சென்னையில் குளோபல் ஸ்போர்ட்ஸ் சிட்டி உருவாக்குதல், தமிழ்நாட்டிலுள்ள அனைத்து பஞ்சாயத்துகளிலும் டாக்டர். கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்குதல், அனைத்து கிராமத்திலும் விளையாட்டுத்திடல் அமைத்தல், சென்னையில் உள்ள 4 விளையாட்டு அரங்கத்தை புதுப்பித்தல், நாட்டிலேயே முதன்முறையாக ஆறு மாவட்டத்தில் உள்ள விளையாட்டு அரங்கங்களில் பிரத்தியேக பாரா விளையாட்டு மைதானங்கள் அமைத்தல், கோவில்பட்டியில் முதன்மை நிலை விளையாட்டு மையம் அமைத்தல், சென்னை நேரு விளையாட்டு அரங்கில் விளையாட்டு அறிவியல் மையம் நிறுவுதல், தொகுதிக்கு ஒரு விளையாட்டு அரங்கம் அமைத்தல், ராமநாதபுரம் மாவட்டத்தில் தமிழ்நாடு ஒலிம்பிக் நீர்நிலை விளையாட்டுக்கான அகாடமி அமைத்தல் போன்ற திட்டங்களை அறிவித்துள்ளோம்.

தமிழ்நாட்டில் தொழில்துறை சிறந்து விளங்குகிறது. தொழில் வளர்ச்சியில், மகாராஷ்ட்டிராவுக்கு பிறகு 2- வது இடத்தில் தமிழ்நாடு உள்ளது. முத்தமிழறிஞர் கலைஞர் ஆட்சி காலத்தில் இருந்தே எடுக்கப்பட்ட நடவடிக்கைகளால், தமிழ்நாட்டில் தொழில்துறை சிறந்து விளங்குகிறது. முதலமைச்சர் அவர்களும், தொழில்துறை சார்ந்து பல சிறப்பான நடவடிக்கைகளை எடுத்துள்ளார்கள். சென்னையில் இருந்த தொழில்வளர்ச்சி மாநிலம் முழுவதும் பெருக வேண்டும் என தென் மாவட்டங்களுக்கு மினி டைடல் பார்க் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டின் தொழில் நிறுவனங்கள் மூலம் முழு ஆதரவுடன் தமிழ்நாடு ஒரு பொருளாதார சக்தியாக மாறியுள்ளது. இப்போது உங்களின் முழு ஆதரவுடனும் பங்களிப்புடனும் தமிழகத்தை ஒரு விளையாட்டு சக்தியாக மாற்றுவதற்கான நேரம் இது

உங்களில் பலர் ஏற்கனவே சாம்பியன்ஸ் அறக்கட்டளைக்கு உங்கள் ஆதரவை வழங்கியுள்ளதை குறிப்பிடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். உங்களில் பலர் விரைவில் பங்களிப்பை வழங்குவீர்கள். இது எனக்கு ஒரு நம்பிக்கையை ஏற்படுத்துகிறது. ஒரு குறுகிய காலகட்டத்தில் நடந்துள்ள இந்த நிகழ்வு மற்றும் இப்படியான முயற்சி எனக்கு ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது” என்று கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோதங்கராஜ் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா தமிழ்நாடு தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ச. கிருஷ்ணன், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ஜெ. மேகநாத ரெட்டி, மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.