புதுக்கோட்டை: ஜல்லிக்கட்டு போட்டியின் போது வாடி வாசல் கட்டையில் மோதி பலத்த காயமடைந்த கருப்புக் கொம்பன் காளை உயிரிழந்தது. பல ஆண்டுகாலமாக குழந்தை போல வளர்த்த காளைகள் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளதால் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் அதிர்ச்சியடைந்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் வடசேரிப்பட்டியில் இரு தினங்களுக்கு முன்பு நடைபெற்ற ஜல்லிக்கட்டில் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கரின் கருப்புக் கொம்பன் காளையும் களமிறங்கியது.
வாடிவாசலில் இருந்து விஜயபாஸ்கரின் காளை அவிழ்த்துவிடப்பட்ட போது சீறிப்பாய்ந்த கருப்புக் கொம்பன், யாரும் எதிர்பார்க்காத வகையில் வாசலில் இருந்த தடுப்புக் கட்டையில் மிக பலமாக மோதி அந்த இடத்திலேயே அப்போதே காளை சுருண்டு விழுந்தது. இதனால் ஜல்லிக்கட்டு சிறிது நேரம் நிறுத்தப்பட்டதுடன் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தனது காளை சீறிப்பாய்ந்து செல்வதை காண்பதற்காக ஜல்லிக்கட்டு போட்டிக்கு வந்திருந்த விஜயபாஸ்கர், அதைப்பார்த்து துடிதுடித்துப் போனார். அடிபட்டு மயக்கமுற்ற நிலையில் கிடந்த தனது காளையின் தலையை கை வைத்து தடவிக்கொடுத்து கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
உயர் சிகிச்சைக்காக ஒரத்தநாடு அரசு கால்நடை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கருப்புக் கொம்பன் காளை அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு அனுமதிக்கப்பட்டிருந்த கருப்புக் கொம்பன் காளைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி கருப்பு கொம்பன் காளை உயிரிழந்து விட்டது. தனது காளை எப்படியும் மீண்டு வந்து விடும் என்று நம்பிக்கையுடன் காத்திருந்தார் விஜயபாஸ்கர். கருப்பு கொம்பன் காளையின் மரணம் விஜயபாஸ்கரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சி. விஜயபாஸ்கர் தனது வீட்டில் ஜல்லிக்கட்டு காளைகளை வளர்த்து வந்தார். கொம்பன், வெள்ளைக்கொம்பன், கருப்பு கொம்பன் காளைகள் பாலமேடு, அவனியாபுரம், அலங்காநல்லூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும், புதுக்கோட்டை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களிலும் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகளில் மாடுபிடி வீரர்களை திணறடித்து, பல்வேறு பரிசுகளை வென்று வந்தது,
விஜயபாஸ்கர் செல்லமாக வளர்த்து வந்த கொம்பன் காளை, சில ஆண்டுகளுக்கு முன்பு வாடிவாசலில் இருந்து வேகமாக வெளியே வருந்த போது தடுப்பு மரத்தில் மோதி தலையில் பலத்த அடிபட்டு பரிதாபமாக உயிரிழந்தது. அந்த கொம்பன் களையை தனது தோட்டத்திலேயே புதைத்து அதற்கு சமாதி அமைத்து விஜயபாஸ்கர் தினசரி வழிபட்டு வருகிறார்.
அதே போல விஜயபாஸ்கர் பாசமாக வளர்த்து வந்த வெள்ளைக் கொம்பன் காளை களத்தில் இறங்கும் காட்சியைப் பார்ப்பதற்காக பலரும் காத்துக்கிடப்பார்கள். அந்த வெள்ளைக் கொம்பன் காளையானது, வயது மூப்பு காரணமாக கடந்த 2021ஆம் ஆண்டு உயிரிழந்தது.வெள்ளைக் கொம்பன் காளை ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, இறுதி சடங்குகள் நடத்தப்பட்டு, அவரின் தோட்டத்தில் புதைக்கப்பட்டது.
இந்த நிலையில் கருப்பு கொம்பன் காளையும் வாடி வாசல் தடுப்பு சுவரில் மோதி காயமடைந்து உயிரிழந்தது. பாசமாக வளர்த்த காளைகள் 4 ஆண்டுகளுக்குள் அடுத்தடுத்து உயிரிழந்தது விஜயபாஸ்கரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.