தலைநகர் டெல்லியில் குத்துச்சண்டை வீரர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதாவது, பாஜக எம்.பியும், இந்திய குத்துச்சண்டை கூட்டமைப்பின் தலைவருமான பிரிஜ் பூஷன் சரண் சிங்கிற்கு எதிராக வினேஷ் போகத், சாக்சி மாலிக், பஜ்ரங் பூனியா உள்ளிட்ட முக்கியமான வீரர்கள் பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்தனர். பிரிஜ் பூஷன் பதவி விலக வேண்டும். உரிய விசாரணை நடத்தி தண்டனை பெற்று தர வேண்டும் என்று ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
டெல்லி போராட்டம்
இந்நிலையில் நேற்று இரவு டெல்லியில் மழை பெய்யத் தொடங்கியது. இதனால் கூடுதல் படுக்கைகள் மற்றும் இருக்கைகள் கொண்டு வர போராட்டக் குழுவினர் முடிவு செய்தனர். இதற்கு ஆம் ஆத்மி எம்.எல்.ஏ சோம்நாத் பார்டி உதவி செய்ததாக தெரிகிறது. அதற்கு டெல்லி போலீசார் அனுமதி தரவில்லை. இந்த சூழலில் போலீசார் சிலர் மதுபோதையில் வந்து மோசமாக நடந்து கொண்டதாக சொல்லப்படுகிறது. அப்போது, பஜ்ரங் பூனியா மற்றும் சாக்ஷியின் கணவர் சத்யவர்த் காடியன் ஆகியோர் குறுக்கிட்டு போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
திடீர் மோதல்
இதையடுத்து இரு தரப்பிற்கும் இடையில் தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. பின்னர் போலீசார் தடியடி நடத்தியுள்ளனர். இதில் பஜ்ரங் பூனியாவிற்கு தோளில் காயம் ஏற்பட்டுள்ளது. வினேஷ் போகத்திற்கு காலில் காயம் ஏற்பட்டது. துஷ்யந்த் போகத்திற்கு நெற்றியில் படுகாயம் ஏற்பட்டுள்ளது. உடனே அவர் ஆர்.எம்.எல் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து பஜ்ரங், சத்யவார்த், ஜிதேந்தர் கின்ஹா உள்ளிட்டோரை கைது செய்ய போலீசார் முயற்சித்தனர்.
ஜந்தர் மந்தரில் பதற்றம்
ஆனால் அவர்கள் மறுத்ததால் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் ஜந்தர் மந்தர் பகுதி முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். நடந்த சம்பவம் தொடர்பாக பேசிய வினேஷ், இந்தியாவிற்காக பதக்கங்கள் வென்றது இப்படிப்பட்ட அராஜக நடவடிக்கைகளை பார்ப்பதற்காகவா? பிரிஜ் பூஷண் நல்ல சொகுசாக வீட்டில் படுத்து உறங்கி கொண்டிருக்கிறார். நாங்கள் இங்கே வீதிகளில் உறக்கமின்றி தவித்து கொண்டிருக்கிறோம். எங்களுக்கு நீதி வேண்டும் என்று வலியுறுத்தினார்.
கொந்தளிக்கும் வீரர்கள்
மேலும் பேசுகையில், எங்களை கொல்ல வேண்டுமெனில் இப்போதே அதை செய்து விடுங்கள். இவ்வாறு டார்ச்சர் பண்ணாதீர்கள். நாங்கள் இந்தியாவின் மகள்கள். எங்களை இப்படி அவமதிக்கக் கூடாது என்றார். சாக்ஷி மாலிக் மற்றும் சங்கீதா போகத் பேசுகையில், இங்கே பெண் வீரர்கள் இருக்கும் போது ஆண் போலீசார் வருகின்றனர். அவர்கள் எங்களை இழுத்து அத்துமீறி நடப்பதாக குற்றம்சாட்டினர். பஜ்ரங் கூறுகையில், டெல்லியில் மழை பெய்து கொண்டிருக்கிறது.
போலீசார் தடியடி
இதற்காக நாங்கள் உறங்குவதற்கு கூடுதல் சில படுக்கைகள், போர்வைகள் கொண்டு வந்தோம். அதற்கு டெல்லி போலீஸ் அனுமதிக்கவில்லை. நாங்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் எங்கள் மீது போலீசார் தடியடி நடத்துவதாக தெரிவித்தார். இவ்வாறு பரபரப்பாக சென்று கொண்டிருந்த போது, மூத்த போலீஸ் அதிகாரிகள் வந்து சமாதானப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இந்நிலையில் தாங்கள் யாரையும் தாக்கவில்லை என்று போலீசார் பதில் அளித்துள்ளனர்.