முதல் முறையாக தீவிர இணைய பயனர்களாக மாறிய 75 கோடி இந்தியர்கள் – ஆய்வில் தகவல்

முதல் முறையாக 50 சதவீதத்துக்கும் அதிகமான இந்தியர்கள் தீவிர இணைய பயனர்களாக மாறியிருப்பதாகவும், குறைந்தபட்சம் மாதம் ஒரு முறையாவது இணையத்தை அணுகுவதாகவும் ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

தொழில்துறை அமைப்பான IAMAI மற்றும் சந்தை தரவு பகுப்பாய்வு நிறுவனமான காந்தார் இணைந்து நடத்திய இந்த ஆய்வின் படி, வரும் 2025 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் இணைய பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கை 90 கோடியை தாண்டும் என்று கூறப்படுகிறது.

தற்போது 75 கோடி இந்தியர்கள் தீவிர இணைய பயன்பாட்டாளர்களாக இருப்பதாகவும், இவர்கள் குறைந்தபட்சம் மாதம் ஒரு முறையேனும் இணையத்தை அணுகுவதாகவும் அந்த ஆய்வறிகையில் கூறப்பட்டுள்ளது. பெரும்பான்மை இந்தியர்கள் தீவிர இணைய பயன்பாட்டாளர்களாக மாறியிருப்பது இதுவே முதல் முறை.

இதில் 39 கோடி பேர் கிராமப் புறங்களைச் சேர்ந்தவர்கள். 36 கோடி பேர் நகர்ப்புறங்களை சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது. நாட்டின் இணைய வளர்ச்சியில் கிராமங்கள் சிறந்த பங்களிப்பை தருவதாக அந்த ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நகர்ப்புறங்களில் இணைய வளர்ச்சி 6% மட்டுமே அதிகரித்துள்ள நிலையில், கிராமப்புறங்கள் கடந்த ஓராண்டில் 14% வளர்ச்சியை தக்க வைத்துள்ளன.

இணைய பயன்பாட்டில் 70% பயனர்களுடன் கோவா மாநிலம் முதலிடத்தில் உள்ளது. பிஹார் மாநிலம் 32 சதவீதத்துடன் கடைசி இடத்தில் உள்ளது.

அதே போல ஆண் பயனர்கள் 54% இருந்தாலும், புதிய பயனர்களில் 57 சதவீதம் பேர் பெண்கள் என்றும், 2025ஆம் ஆண்டில் 65% புதிய பயனர்கள் பெண்களாக இருப்பார்கள் என்றும் ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இ-காமர்ஸ் தளங்களுக்கு அடுத்தபடியாக சமூக வலைதள பயன்பாட்டிலும் இந்தியர்கள் விரைவான வளர்ச்சியை (51 சதவீதம்) எட்டியுள்ளனர். 34 கோடி பேர் (13%) டிஜிட்டல் பரிவர்த்தணைகளில் ஈடுபடுவதாகவும், இதில் 36% பேர் கிராமப்புறங்களை சேர்ந்தவர்கள் என்றும் அந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.