சீயோல்: அரசுமுறை பயணமாக தென் கொரியா சென்றுள்ள நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை அங்குள்ள தமிழ்ச் சங்க நிர்வாகிகள் நேரில் சந்தித்துள்ளனர். அப்போது அவரிடம் இந்தியக் குழந்தைகளுக்காக ஆசிய பள்ளி, சென்னை – சியோலிடையே நேரடி விமான சேவை, கொரியாவில் திருவள்ளுவர் சிலை நிறுவுதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மனு ஒன்றை கொடுத்துள்ளனர்.
அமைச்சருடனான இந்த சந்திப்பு குறித்து தென் கொரிய தமிழ்ச் சங்கம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், தென் கொரியாவில் நடைபெற்ற ஆசிய வளர்ச்சி வங்கியின் 56-வது ஆண்டு கூட்டத்தில் (Asian Development Bank’s 56th Annual Meeting) கலந்துகொள்ளுதல் மற்றும் கடல்சார் பொருட்கள் செயலாக்கத் துறை சார்ந்த நிறுவனங்களுடனான சந்திப்பு உள்ளிட்ட பணிகள் நிமித்தம் அரசுமுறை பயணமாக தென்கொரியாவிற்கு வருகை தந்துள்ளார்.
அவரது பயணத்தின் ஒரு பகுதியாக, 02-05-2023 அன்று இந்திய தூதரகம் ஏற்பாடு செய்திருந்த தென் கொரியா-வாழ் இந்திய சமுக பிரதிநிதிகளுடனான சந்திப்பில் அமைச்சர் கலந்துகொண்டு உரையாற்றினார்.
தூதரகத்தின் அழைப்பின் பேரில் கொரிய தமிழ்ச்சங்க நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். தனது உரையில், உலக வெப்பமயமாதல் மற்றும் கரோனா பெருந்தொற்றிற்கு பின்னர் ஏற்பட்டிருக்கும் உலகப் பொருளாதார மறுசீரமைப்பு பற்றி குறிப்பிட்டு, இந்தியா அதனை கவனத்தில் கொண்டு தேவையான உள்கட்டமைப்பு மற்றும் செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான தொழில்நுட்பங்களை ஊக்குவித்தல் போன்ற பணிகளை சிறப்பாக செய்து வருவதாகக் கூறினார்.
நிகழ்வின் இறுதியில் சங்க உறுப்பினர்கள் அமைச்சரை தமிழ் முறைப்படி பொன்னாடை கொடுத்து வரவேற்று கொரியாவாழ் மக்கள் நலன் தொடர்பான கோரிக்கைகள் அடங்கிய விண்ணப்பத்தினை வழங்கினார்கள்.
விண்ணப்பத்தை மகிழ்வுடன் பெற்றுக்கொண்ட அமைச்சர், கோரிக்கைகளை கனிவுடன் பரிசீலிப்பதாக கூறினார்.
அந்நிய மண்ணில் சங்கத்தின் நிர்வாகிகளுடன் இன்முகத்தோடு தமிழில் உரையாடிய அமைச்சருடனான இந்த சந்திப்பு மகிழ்ச்சியளிப்பதாகவும் பயனுள்ளதாகவும் அமைந்திருந்தது.
கொரிய தமிழ்ச் சங்கம் அமைச்சரிடம் முன்வைத்த கோரிக்கைகளின் சுருக்கம் பின்வருமாறு.
1. நமது நாட்டில் உற்பத்தியாகும் அரிசி வகைகள் 5% இறக்குமதி வரி என்கிற வரையறைக்குள் கொரியாவில் வசிக்கும் இந்தியர்களுக்கு கிடைக்க ஏற்பாடு செய்தல்.
2. இந்திய குழந்தைகள் அதிகம் பயன்பெரும் வகையிலான குறைந்த செலவில் கல்வியை வழங்கி நிலைத்திருக் கூடிய ஆசிய பள்ளியை கொரியாவில் அமைத்தல்.
3. ராமநாதபுரம் மன்னர் பாஸ்கர சேதுபதி படத்தை உலக நாடுகளில் இந்திய அரசால் நடத்தப்படும் சுவாமி விவேகானந்தர் கலாச்சார மையங்களில் வைத்தல்.
4. சென்னை – சியோல் இடையேயான நேரடி விமான சேவையை தொடங்க வேண்டுதல்.
5. மிகச்சிறந்த தமிழ் இலக்கியங்களை/நூல்களை கொரிய மொழியில் மொழிபெயர்க்க வேண்டுதல்.
6. இந்தியா-கொரிய நேரடி தொழிலாளர் ஒப்பந்தம் (அல்லது புரிந்துணர்வு ஒப்பந்தம்) ஏற்பட வழிவகை செய்தல்.
7. தெய்வப்புலவர் திருவள்ளுவர் சிலையை கொரியாவில் நிறுவ வழிவகை செய்தல்.
கொரிய தமிச் சங்கத்தின் தலைவர் அரவிந்த் ராஜா, துணைத்தலைவர் விஜயலட்சுமி, செயலாளர் சரவணன், சங்கத்தின் கலைக்குழு ஒருங்கிணைப்பாளர்கள் வைஷ்ணவி, பத்மப்பிரியா மற்றும் மூத்த உறுப்பினர் இராஜப்பிரியா ஆகியோர் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.