சென்னை: எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வந்தே பாரத் ரயிலில் வந்த புகைப்படத்தை பலரும் வெளியிட்டிருக்கிறார்கள். எடப்பாடிக்கு மட்டுமல்ல, சேலத்தில் உள்ளவர்கள் எல்லாருக்கே சென்னைக்கு செல்ல விமானத்தை நாடுவதை விட வந்தே பாரத் ரயிலில் வருவது தான் சிறந்தது. அப்படி என்ன காரணம் என்பதை கொஞ்சம் கூட்டி கழிச்சு பார்த்தால் உங்களுக்கே தெரிந்துவிடும்.
சென்னையில் இருந்து கோவை அதிவேகத்தில் செல்லும் ஆம்னி பேருந்துகளில் கூட 8 மணி நேரம் ஆகும். நீங்கள் கோயம்பேட்டில் ஏறினால் நிச்சயம் இன்னும் கூடுதலான நேரமே ஆகும். ஏனெனில் சென்னையின் போக்குவரத்து நெரிசல் அப்படி, சென்னையில் இருந்து செங்கல்பட்டு பரனூர் டோல்கேட்டை தாண்டிவிட்டால், கோவைக்கு பயண நேரம் என்பது ஆறு மணி நேரமே அதிகம் தான். அந்த அளவிற்கு வேகமாக செல்கின்றன.
சரி விஷயத்திற்கு வருவோம். சென்னையில் இருந்து கோவைக்கு பகல் நேரத்தில் செல்ல வந்தே பாரத் ரயில் விடப்பட்டிருக்கிறது. வெறும் 5.50 மணி நேரத்தில் கோவைக்கு சென்றுவிடும். கோவையில் இருந்து சென்னைக்கும் இதே நேரத்தில் வந்துவிடுகிறது. சென்னையில் இருந்து கோவைக்கே 5.50 மணி நேரத்தில் வரமுடிகிறது என்றால் சேலத்தை பற்றி யோசித்து பாருங்கள். வெறும் 3.45 மணி நேரத்தில் சேலத்தில் இருந்து சென்னையை அடைந்து விட முடியும்.
காலையில் 8மணிக்கு ஏறினால் 11.45 அல்லது 11.50க்கு எல்லாம் சென்னை சென்டரலுக்கே வந்துவிடும். அதேபோல் பிற்பகல் 2.25க்கு சென்னையில் ஏறினால் மாலை 5.48க்கு சேலம் வந்துவிடும். வந்தே பாரத் ரயிலில் சேலத்தில் இருந்து சென்னைக்கு கட்டணம் என்று பார்த்தால் சாதாரண இருக்கைக்கு 895 ரூபாய் தான் . எக்ஸிகியூட்டிவ் இருக்கைக்கு 1740 ரூபாய் கட்டணம் ஆகும்.
இப்போது விஷயத்திற்கு தெளிவாக வருவோம். முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வழக்கமாக சென்னை செல்ல சேலத்தில் இருந்து கோவை வந்து, கோவையில் இருந்து சென்னைக்கு விமானத்தில் செல்வார். அப்படி செல்வதாக இருந்தால், சேலத்தில் இருந்து சுமார் 166 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கோவைக்கு வர வேண்டும்.
மிக அதிக போக்குவரத்து நெரிசல் உள்ள கோவை சேலம் இடையே மின்னல் வேகத்தில் வந்தால் கூட குறைந்தது அதற்கு 2 மணி நேரத்திற்கு மேல் ஆகும். அங்கிருந்து விமானத்தில் ஏறி, அதன்பின் சென்னை விமான நிலையத்தில் இறங்கி போக வேண்டிய இடத்திற்கு போக குறைந்தது 3.30 மணி நேரம் முதல் 4மணி நேரம் ஆகிவிடும். ஏனெனில் சென்னை போக்குவரத்து நெரிசல் அந்த அளவு கடுமையானது. அதேநேரம் கோவையில் இருந்து சென்னைக்கு விமானத்தில் செல்ல கட்டணமும் அதிகமாகும். அதற்கு குறைந்தது 4 ஆயிரம் ரூபாயாவது சாராண நாட்களில் செலவு செய்ய வேண்டும். விஷேச நாட்கள் என்றால் சொல்லவே வேண்டாம்.
ஆனால் வெறும் 895 ரூபாய் கட்டணம் செலுத்தினால் அடுத்த 3.50 மணி நேரத்தில் சேலத்தில் இருந்து சென்னை சென்றுவிடலாம். எந்த ஆம்னி பேருந்துகளாலும் இவ்வளவு வேகமான நேரத்தில் பகலில் சென்னையில் இருந்து சேலத்தை அடைய முடியாது. எனவே எடப்பாடி பழனிசாமிக்கு மட்டுமல்ல.. சேலத்துல இருக்குற எல்லாருக்குமே.. வந்தே பாரத் ரயில் தான் சென்னைக்கு வேகமாக வர பெஸ்ட் வழி மக்களே.. சென்னையில் இருந்து கோவைக்கு வந்தது போல், மதுரைக்கும், நாகர்கோவிலுக்கும் வந்தே பாரத் ரயில் விட்டால் சிறப்பாக இருக்கும்என்பது மக்களின் கோரிக்கையாக உள்ளது. விரைவில் வந்தே பாரத் ரயிலை, தென்பகுதிக்கும் வர வாய்ப்பு உள்ளது.