சித்தா பல்கலை. மசோதா விவகாரத்தில் இதுவரை நடந்தது என்ன? – அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்

சென்னை: சித்தா பல்கலைக்கழக மசோதா விவகாரம் தொடர்பாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார். ‘திராவிட மாடல் ஆட்சி என்பது வெறும் அரசியல் கோஷம். காலாவதியான ஒரு கொள்கையை உயிர்ப்புடன் வைக்க மேற்கொள்ளப்படும் முயற்சி. திராவிட மாடல் என்பது நமது ஒரே பாரதம் கொள்கைக்கு எதிரானது’ என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்து இருந்தார். மேலும், தமிழக அரசு நிறைவேற்றி அனுப்பிய சித்தா பல்கலைக்கழக மசோதா நிறுத்திவைக்கப்பட்டுள்ளது, அந்த மசோதா பல்கலைக்கழக மானிய குழு விதிகளுக்கு எதிராக உள்ளதால் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

இது தொடர்பாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “சித்தா பல்கலைக்கழகம் என்பது முதல்வரால், தமிழக மக்களின் பாரம்பரிய வைத்திய முறைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கின்ற வகையில் செய்யப்பட்ட நல்ல விஷயம். அதற்காக இன்றைக்கு மாதவரம் பால் பண்ணையில் 25 ஏக்கர் நிலம் அடையாளப்படுத்தப்பட்டு நிலமாற்றம் செய்யும் பணிகளும் முடிவுற்று இன்றைக்கு இந்திய மருத்துவத் துறைக்கு அந்த இடம் கொடுத்திருக்கிறார்கள்.

அதேபோல் சித்த மருத்துவ பல்கலைக்கழகத்தின் தலைமையிடம் ஒன்றினை திறப்பதற்கு அண்ணா நகரில் இருக்கும் சித்த மருத்துவனையில் திறப்பதற்கு தயார் நிலையில் உள்ளது. இது தமிழக மக்களின் மிகப்பெரிய அளவிலான எதிர்பார்ப்பை பாரம்பரிய வைத்திய முறைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கின்ற வகையில் கொண்டுவரப்பட்ட மசோதோவாகும். 13.08.2021 அன்று நிதிநிலை அறிக்கையின் போது நிதியமைச்சர், இதற்கான அறிவிப்பினை வெளியிட்டார்கள். 02.09.2021 அன்று அனைத்து இந்திய மருத்துவ முறைகளுக்கும் சென்னைக்கு அருகில் தனி சித்த மருத்துவப் பல்கலைக்கழகம் நிறுவப்படும் என்று நிதிநிலை அறிக்கை அ.எண்.107ன்படி, அன்று அறிவிக்கப்பட்டது. 24.11.2021 அன்று இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை இயக்குநர் தனது கடிதத்தில் தமிழ்நாடு சித்த மருத்துவ பல்கலைக் கழகத்திற்கான வரைவு மசோதவை அனுப்பினார்.

18.02.2022 அன்று மேற்கூறிய சட்ட வரைவு முன்மொழிவு (Money Bill) என்பதால் சட்டத் துறையுடன் கலந்தாலோசித்து, தமிழ்நாடு சித்த மருத்துவப் பல்கலைக்கழக வரைவு மசோதா தயாரிக்கப்பட்டு ஆளுநரின் பரிந்துரை மற்றும் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டது. ஆளுநரின் பரிந்துரை மற்றும் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டது. 15.03.2022 அன்று ஆளுநர் தமிழ்நாடு சித்த மருத்துவப் பல்கலைக்கழக வரைவு மசோதாவினை சட்டமன்றத்தில் அறிமுகப்படுத்துவதற்கு ஒப்புதலை அளித்தார். 16.03.2022 அன்று ஆளுநர் ஒப்புதல் அளித்த நிலையிலும், ஆளுநரின் முதன்மைச் செயலர் எழுதிய கடிதத்தில், “3 அமைச்சர்களுடன் முதல்வர் என்னை சந்தித்தார், அப்போது இந்த மசோதா UGC சட்டம் மற்றும் விதிமுறைகளுக்கு இசைவாக இருக்க வேண்டும் என்று நான் அவர்களுக்கு அறிவுறுத்தினேன்” என கூறி ஆளுநரின் முதன்மைச் செயலர் அரசுக்கு கோரிக்கை விடுத்தார்.

21.04.2022 அன்று சட்டம் மற்றும் உயர்கல்வித் துறையின் கருத்துகளைக் கருத்தில்கொண்டு, தமிழ்நாடு சித்த மருத்துவப் பல்கலைக்கழக மசோதா, மேற்கூறிய UGC சட்டம் மற்றும் விதிமுறைகளுக்கு முரண்பாடாக இல்லை என்று ஆளுநரின் முதன்மைச் செயலாளருக்கு தெரிவிக்கப்பட்டது. 27.04.2022 அன்று “தமிழ்நாடு சித்த மருத்துவப் பல்கலைக்கழக சட்ட மசோதா 2022” சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. 28.04.2022 அன்று இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. 05.05.2022 அன்று இந்த மசோதா ஆளுநர் அலுவலகத்திற்கு ஒப்புதல் வேண்டி சட்டத்துறையால் அனுப்பப்பட்டது.

இரண்டு மாதம் கழித்து 25.07.2022 அன்று ஆளுநரின் முதன்மைச் செயலாளர் சட்டத்துறைக்கு அனுப்பிய கடிதத்தில் சித்த மருத்துவ பல்கலைக்கழக சட்ட மசோதாவில் உள்ள மாணவர்கள் சேர்க்கை சம்பந்தப்பட்ட சில பிரிவுகள் இந்திய மருத்துவ முறைக்கான தேசிய ஆணையச் சட்டம், 2020ல் உள்ள சில சட்டப் பிரிவுகளுக்கு முரண்பாடாக உள்ளதா? என்பதை ஆராய்ந்து குறிப்புரை வழங்குமாறு கேட்டுக்கொண்டார். அதன்படி 25.08.2022 அன்று ஆளுநர் அலுவலகத்திற்கு தகுந்த விளக்கத்தை அளிக்கும் வகையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை விரிவான விளக்கத்தினை சட்டத்துறைக்கு வழங்கியது. 17.09.2022 அன்று சட்டத்துறை இந்த விரிவான விளக்கத்தினை ஆளுநரின் செயலருக்கு அனுப்பியது.

ஆளுநர் ஒப்புதலைப் பெற்று அளிக்குமாறு ஆளுநரின் முதன்மைச் செயலருக்கு 19.10.2022, 15.11.2022, 14.12.2022, 24.01.023, 27.02.2023, 28.03.2023 மற்றும் 28.04.2023 என்று 7 முறை சட்டத்துறையின் செயலாளர் நினைவூட்டுக் கடிதத்தை அனுப்பியுள்ளார். பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்களும் இந்த கோரிக்கையினை ஆளுநரிடத்தில் விடுத்து வந்தார்கள். இந்த நிலையில் மசோதோ பல்கலைக்கழக மானியக் குழுவின் விதிமுறைகளுக்கு முரணாக இருக்கின்றது என்று பொருந்தாத தகவல் இதுவரை கூறப்பட்டு வந்தது.

முதல்வர், வேந்தர்களை பல்கலைக்கழகங்களில் நியமிப்பதற்கு அதிகாரம் உள்ளது என்று இதற்கு முன்பு குஜராத், மேற்கு வங்கம், கர்நாடகா ஆகிய மாநிலங்கள் கொண்டுவந்துள்ளது. அது போலவே இந்த மசோதாவிலும் கொண்டுவரப்படும் என்று முன்பே தெரிவிக்கப்பட்டது. குஜராத்தில் இந்த மாதிரியான மசோதா கொண்டுவரப்பட்ட போது அந்த மாநிலத்தின் ஆளுநர் அவர்கள் அதற்கு ஒப்புதலை கொடுத்துள்ளார்கள்.

மேலும் மத்திய மாநில உறவை ஆராயும் பூஞ்சி ஆணையம் “Burdening the Governor with positions and powers which are not envisaged by the Constitution and which may lead the office to controversies or public criticism” இவ்வாறு ஆளுநருக்கு வேந்தர்களை நியமிக்கும் பணி என்பது கூடுதல் சுமையாகும் என்று கூறியுள்ளது. பல்கலைக் கழக மானியக் குழுவினாலும் பல்கலைக்கழக வேந்தர்களை ஆளுநர் தான் நியமிக்க வேண்டும் என்று எங்கும் கூறப்படவில்லை. எனவே ஆளுநர், இதனை எல்லாம் கருத்தில் கொண்டு சித்த மருத்துவ பல்கலைக்கழக மசோதாவிற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று கடிதம் விரைவில் ஆளுநரின் அலுவலகத்திற்கு அனுப்பப்படும்” என்று அமைச்சர் கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.